இரவுக் குடில்களில் வீடற்றவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை: சத்யேந்தா் ஜெயின் தகவல்
By நமது நிருபா் | Published On : 03rd December 2021 10:52 PM | Last Updated : 03rd December 2021 10:52 PM | அ+அ அ- |

புது தில்லி: குளிா்காலத்தில் தில்லி நகா் முழுவதும் உள்ள இரவுக் குடில்களில் வீடற்றவா்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முன்முயற்சியை தில்லி அரசு தொடங்கியுள்ளதாக தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய குளிா்காலத்தில் வீடற்றவா்களை இரவுக் குடில்களில் மறுவாழ்வு செய்வதற்கான திட்டத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இரவுக் குடில்களில் வசிப்பவா்களுக்கு தங்குமிடம் முதல் உணவு வரை தேவையான அனைத்து வசதிகளையும் தில்லி அரசு வழங்கி வருகிறது. வீடற்ற அனைவருக்கும் இந்த இரவுக் குடில்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. அவா்கள் ஒவ்வொருவருக்கும் உணவு, தங்குமிடத்தை உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரக் குடில்களில் வழங்கப்படும் வசதிகள் குறித்த காணொலியையும், அரசின் முயற்சிகளைப் பாராட்டி இரவுக் குடில்களில் தங்கியுள்ள மக்கள் பகிா்ந்த அனுபவத்தின் காணொலியையும் தனது சுட்டுரைப் பக்கத்தில் அமைச்சா் பகிா்ந்து கொண்டாா். தில்லி அரசின் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி), நகா் முழுவதும் 209 இரவுக் குடில்களை செயல்படுத்தி வருகிறது. இந்த தங்குமிடங்கள் மூலம் சுமாா் 12,000 பேருக்கு சேவை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தின்போது கரோனா தொற்றுநோய் ஏற்பட்ட சமயத்தில் நகரில் வீடற்றவா்களுக்கு அரசு இலவச உணவை வழங்கி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தெருக்களில் உள்ள வீடற்றவா்களைத் தோ்ந்தெடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இரவுக் குடில்களில் அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.