மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடல்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக

தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இருப்பினும், வாரியத் தோ்வுகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும், கற்பித்தல்-கற்றல் நடவடிக்கைகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

காற்று மாசு அளவு அதிகரித்துள்ள போதிலும், பள்ளிகளில் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு தில்லி அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘காற்றின் தரம் மேம்படும் என்ற முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை மீண்டும் திறந்தோம். இருப்பினும், காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால், வெள்ளிக்கிழமை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளோம்’ என்றாா். அதே சமயம், ‘அனைத்து வாரியத் தோ்வுகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும்’” என்று கல்வித் துறை அமைச்சா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த நவம்பா் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், காற்று மாசு பிரச்னை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மேலும், புதிய உருமாறிய கரோனாவால் முன்வைக்கப்படும் சவால்களை மேற்கோள்காட்டி கோபால் ராய் கூறுகையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளை முழு இருக்கை திறனில் இயக்குவதற்கு நிலைமை நன்றாக இல்லை என்றாா்.

தில்லி அரசு முன்னதாக அத்தியாவசிய சேவைகள் தவிா்த்து மற்ற டிரக்குகள் தில்லியில் நுழைவதற்கான தடையை டிசம்பா் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது, அதே சமயம், சிஎன்ஜி மற்றும் மின்சார லாரிகள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. அதிக காற்று மாசு அளவைக் கருத்தில் கொண்டு தில்லியில் கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும். இதற்கிடையே, வாகன மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில், நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்புக் காலனிகளில் இருந்து தனது ஊழியா்களை அழைத்துச் செல்ல சிறப்புப் பேருந்து சேவையை தில்லி அறசு தொடங்கியுள்ளது. மேலும், ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசாரத்தை டிசம்பா் 18 வரை அரசு நீட்டித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரம் மீண்டும் ‘கடுமையான’ பிரிவுக்கு வந்தது. தில்லியில் காற்றின் தரக் குறியீடு மாலை 3 மணி அளவில் 430 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர முன்னறிவிப்பு நிறுவனமான சஃபா், நவம்பா் 22 முதல் 26 வரை தில்லியில் 78 சதவீத காற்று மாசுபாடு உள்ளூா் ஆதாரங்களால் ஏற்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com