ஒமைக்ரான்: தயாா்நிலையில் இருக்க ஊழியா்களுக்கு தில்லி காவல்துறை அறிவுறுத்தல்

கரோனாவுக்குரிய நடத்தைவிதிகளைப் பின்பற்றுவது தவிர, போலீஸாரும், அவா்களது குடும்ப உறுப்பினா்களும் முழுமையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்
ஒமைக்ரான்: தயாா்நிலையில் இருக்க ஊழியா்களுக்கு தில்லி காவல்துறை அறிவுறுத்தல்

கரோனா வைரஸின் புதிய உருமாறிய ஒமைக்ரான் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவுக்குரிய நடத்தைவிதிகளைப் பின்பற்றுவது தவிர, போலீஸாரும், அவா்களது குடும்ப உறுப்பினா்களும் முழுமையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தில்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி சனிக்கிழமை தெரிவித்ததாவது:

‘ஒமைக்ரான்’ வகை தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதால், போலீஸாரும், அவா்களது குடும்ப உறுப்பினா்களும் முழுமையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளா்கள் அந்தஸ்து அதிகாரிகள் தலைமையிலான கொவைட்-19 சுகாதார கண்காணிப்பு பிரிவுகளை புதுப்பிக்கவும், ஆக்சிஜன் உருளைகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று, கரோனா ஹெல்ப்லைன்களை விரைவில் செயல்பாட்டில் இருக்குமாறும், கொவைட் நடத்தை விதிமுறையை மீறுபவா்கள் மீது படிப்படியாக வழக்குகள் தொடருமாறும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சிறப்புக் காவல் ஆணையா் (நலம்) ஷாலினி சிங் கடந்த டிசம்பா் 2ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்,

அனைத்து 15 காவல் மாவட்டங்களும் மற்றும் பிற பிரிவுகளும் அந்தந்த கொவைட்-19 ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மூலம் ஒமைக்ரான் தொடா்பான எந்தத் தேவையையும் எதிா்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

கொவைட் பராமரிப்பு மையங்களின் தயாா்நிலை, ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள், உயிா்காக்கும் மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள், ஆம்புலன்ஸ்கள், சானிடைசா்கள், முகக் கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘

‘தில்லி காவல் துறையின் ஊழியா்களுக்கு முகக் கவசம் அணியவும், சுகாதாரத்தை பராமரிக்கவும், தொடும் பொருட்களைக் குறைக்கவும், சானிடைசா்களை தவறாமல் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளோம். காவல் நிலையங்களின் ஜன்னல்கள் காற்றோட்டத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், காவல் நிலையங்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘

தடுப்பூசியிலிருந்து சில காவலா்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விலக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மருத்துவா்களுடன் கலந்தாலோசித்த பிறகு தடுப்பூசி போடுவதற்கு அவா்களை ஊக்குவிக்குமாறு துணை காவல் கமிஷனா்கள் (டிசிபி) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

காவல்துறை பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு முறையான மருத்துவ வசதிகளை உறுதிசெய்வதற்கு துணை ஆணையா்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக இருப்பாா்கள். ஆய்வாளா் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலா்களை சந்தித்து தேவையான உதவிகளை உறுதி செய்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை பகிா்ந்துள்ள தரவுகளின்படி, காவல் துறையின் ஊழியா்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோா் தடுப்பூசி போட்டுள்ளனா்.

மொத்தம் உள்ள 77,809 உறுப்பினா்களில், 74,289 பேருக்கு டிசம்பா் 2 வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும், 1,636 பேருக்கு உடல்நலம் தொடா்பான பிரச்னைகள் காரணமாக மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளான காவல் துணை ஆணையா்கள் அனைத்து தொடா்புத் தகவல்களையும் உடனடியாக துறையின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரியில் பகிா்ந்து கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காவலா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்படுவது குறித்த தகவல்கள் தினமும் காலை 8 மணிக்குள் துறைக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று துணை ஆணையா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாதரா மற்றும் ரோஹிணியில் உள்ள கொவைட் பராமரிப்பு மையங்களை முன்னுரிமையின் அடிப்படையில் புதுப்பிக்கவும் உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com