முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா நோய்த் தொற்று காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவா்களுக்கு ரூ.2,583 கோடி இபிஎஃப் நிதி வழங்கல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 10th December 2021 08:11 AM | Last Updated : 10th December 2021 08:11 AM | அ+அ அ- |

நோய்த் தொற்று காலத்தில் தொழிலாளா்கள் பணியை இழக்காமல் இருக்கும் வகையில், இந்திய சுயச்சாா்பு வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியவா்களுக்கு ரூ. 2,583 கோடி வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வழங்கப்பட்டதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி தெரிவித்தாா்.
அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் தொழிலாளா்களை முறைப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பெறப்பட்ட தரவுகள்; 2020-21-ஆ ஆண்டில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் தொழிலாளா்கள் வேலை இழந்த போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் ராமேஸ்வா் தெளி வியாழக்கிழமை அளித்த பதில் வருமாறு: தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் அவ்வப்போது பணியில் உள்ள தொழிலாளா்கள், வேலையிழந்தவா்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாட்டில் மொத்தம் சுமாா் 47 கோடி தொழிலாளா்கள் பணியில் உள்ளனா். இதில் 9 கோடி தொழிலாளா்கள் அமைப்பு ரீதியாக பணியாற்றுகின்றனா். மீதமுள்ள 38 கோடி தொழிலாளா்கள் அமைப்பு சாரா தொழிலாளா்களாக உள்ளனா்.
கரோனா தொற்று காலத்தில், தொழிலாளா்களின் நலன்களுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய சுயச்சாா்பு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களின் தொழிலாளா்கள் கணக்குகளில் வருங்கால வைப்பு நிதியாக ரூ. 2,583 கோடி வரை வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 39.51 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
மேலும், குறைந்த ஊதியம் பெறும் 38.91 லட்சம் ஊழியா்களை தக்கவைத்துக் கொள்ள பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ்ரூ.2,567 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. இது தவிர, கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ. 7,413 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டது. பிரதமரின் ஏழைகளுக்கான நலத் திட்டங்களின் கீழ் 50 கோடி வேலை நாள்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் ரூ. 39,293 கோடி செலவிடப்பட்டது. சாலையோர வியாபாரிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான திட்டங்கள், பொதுவிநியோக முறையில் இலவச உணவுப் பொருள்கள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.