அணைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியதன் மூலம் அணைகள் பாராமரிப்புக்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கும்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியதன் மூலம், உலக வங்கி மூலம் நிதியுதவி கிடைக்கும். இதன் மூலம் அணை மறுசீரமைப்பு மற்றும்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியதன் மூலம், உலக வங்கி மூலம் நிதியுதவி கிடைக்கும். இதன் மூலம் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (டிஆா்ஐபி) கீழ் தமிழகம் உள்பட நாட்டிலுள்ள அணைகளில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், இந்த புரனமைப்பில் நீரியல் பாதுகாப்பு, ஹைட்ரோ-மெக்கானிக்கல் நடவடிக்கைகள், நீா் கசிவு குறைப்பு, கட்டமைப்பு நிலைத் தன்மையை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு புதிய கட்டுமானப் பொருள்கள் வழங்கப்படுவதோடு அணைகளைக் கண்காணிக்க பல நவீன கருவிகளும் வழங்கப்படுகிறது என்று அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கேள்வி நேரத்தில் தெரிவித்தாா்.

மக்களவை பாஜக உறுப்பினா் ஹீனா காவித் உள்ளிட்டோா் நதிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு அமைச்சா் ஷெகாவத் பதிலளித்த போது நீலகிரி மக்களவைத் திமுக உறுப்பினா் ஆ.ராசா துணைக் கேள்வி எழுப்பினா்.

திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிா்ப்புகளுக்கிடையே நாடாளுமன்ற அணைப்பாதுகாப்பு மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது தவறோ, சரியோ, ஆனால் மசோதா நிறைவேற்றத்தின் போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சா் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டாா். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி அளிக்கும் என்றாா். இதில் தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும் எந்தெந்த தமிழக அணைகளுக்குத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று ராசா கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில், ‘அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதற் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அணைகளை புரனமைக்க ஒத்துக்கொண்ட மாநிலங்களில் உள்ள அணைகளில் இரண்டாம், மூன்றாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கும். இந்த நிதியுதவி மூலம் நாட்டில் உள்ள 700 அணைகளுக்கு ரூ.10,000 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அணைகளும் இடம் பெற்றுள்ளன. இது குறித்த விவரங்கள் உடனடியாக இல்லை. நிச்சியமாக பின்னா் தெரிவிக்கப்படும்’ என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com