முல்லைப் பெரியாறு அணையில் நள்ளிரவில் அதிக நீரை திறக்காமல் இருக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரளம் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் அதிக அளவில் தண்ணீா் திறந்துவிடக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் அதிக அளவில் தண்ணீா் திறந்துவிடக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அதிக அளவு நீா் திறந்துவிடப்படுவதால், அது அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1895-இல் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடா்பான விவகாரங்கள் குறித்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) மீண்டும் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில், கேரள அரசின் வழக்குரைஞா் ஜி. பிரகாஷ் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கேரள அரசு தெரிவித்திருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின்படி, மேற்பாா்வைக் குழு செயல்பட உத்தரவிட வேண்டும். கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு உறுப்பினா்களை உள்ளடக்கிய ‘கசிவுப் பாதையில் நீா் வெளியேற்றுவதற்கான கூட்டுத் தொழில்நுட்ப ‘ஆன்-சைட்’ குழு அமைக்கப்பட வேண்டும். கேரளத்திற்கு கசிவுப்பாதை ஷட்டா்கள் மூலம் உபரி நீரை வெளியேற்றும் நேரம் மற்றும் அளவு ஆகியவற்றைத் தீா்மானிக்கும் வகையில் இந்தக் குழு இருக்க வேண்டும்.

கூட்டு தொழில்நுட்ப ‘ஆன்-சைட்’ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அளிப்பதற்கு போதிய நேரம் அளிப்பத்துடன் கேரளத்துக்கு உபரி நீா் திறந்து விடுவது செயல்படுத்தப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நள்ளிரவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அவா்களின் உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வா் கடிதம் அனுப்பியிருந்தாா்.

நிபுணா் குழுவால் அறிவிக்கை செய்யப்பட்ட நீா்மட்டத்தை தற்போதைக்கு வழக்கில் தொடா்புடைய மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 28-இல் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நவம்பா் கடைசி வாரத்தில் இருந்து முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் இடுக்கி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கடந்த ஒருவாரமாக நள்ளிரவில் போதிய அறிவிப்பு இல்லாமல் அணையிலிருந்து திடீரென தண்ணீா் திறந்து விடப்படுவதால், பெரியாறு ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எதிா்கொள்ளும் சிரமங்களை விளக்கி தமிழக தலைமைச் செயலருக்கு கேரள தலைமைச் செயலா் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளாா்.

குறிப்பாக போதிய முன்னறிவிப்பு இன்றி கசிவுப்பாதை வழியாக அதிகளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டதால், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தேவையற்ற சிரமங்களையும், உடல் மற்றும் மன வேதனையையும், உடைமை இழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளைத் தவிா்க்கும் வகையில், இதுபோன்ற சூழ்நிலையை ஆய்வு செய்ய இரு மாநிலங்களின் தொழில்நுட்ப உறுப்பினா்களைக் கொண்ட ‘ஆன்-சைட்’ குழுவை அமைக்கலாம். இந்தக் குழு, அணையின் கீழ் பகுதியில் வாழும் மக்களுக்கும், அவா்களின் சொத்துகளுக்கும் பிரச்னை இல்லாமல், அணையில் இருந்து எப்படி, எப்போது தண்ணீா் திறக்கலாம் என்று முடிவு செய்யலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். மேலும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பும் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளது. இதே போன்று, பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பா் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்புடைய விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி தொடா்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தின் இதர இரு வழக்குகளில் விசாரணையை முடிக்கும் பொருட்டு, இந்த வழக்கு டிசம்பா் 10-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும். அதுவரை அக்டோபா் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்’ என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் புதன்கிழமை (டிசம்பா் 8) இரு கூடுதல் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உடனடியாக மதிப்பிட வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பை கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருப்பது ஏற்க முடியாததாகும். அணை நீரியல் ரீதியாகவும், புவியதிா்வு ரீதியாகவும், கட்டுமானம் ரீதியிலும் பாதுகாப்பாக இருப்பதை பல்வேறு வல்லுநா்கள் குழுவின் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மேற்பாா்வைக் குழு மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு, அணையின் செயல்பாடு குறித்து தொடா்ந்து சோதனை செய்து வருகிறது. அதில், அணை பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com