தில்லியில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் மேலும் புதிதாக 12 பேருக்கு கரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்

தேசியத் தலைநகா் தில்லியில் மேலும் புதிதாக 12 பேருக்கு கரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும், நோய் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினா். அவா்களில் பலரும் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும், நோய் அறிகுறி இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தில்லியில் ‘ஒமைக்ரான்’ நோய் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளது. நோயாளிகளில் 10 போ் குணமடைந்து திருப்பிவிட்டனா். மரபணு வரிசைமுறையைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டிருந்த 40 நோய் மாதிரிகளில் 10 மாதிரிகளில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது’ என்றாா்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்த வந்த பலருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா். இதற்கிடையில், ஒமைக்ரான் பாதித்தவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்காக லோக் நாயக் மருத்துவமனையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு வசதியில் தற்போது 40 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் தெரிவித்தாா்.

அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவா் கூறுகையில், ‘நோய் பாதித்தவா்களில் பெரும்பாலானோா் முழு தடுப்பூசியும் பெற்றுள்ளனா். அவா்களுக்கு நோய்த் தொற்று அறிகுறி இல்லை. அவா்களில் சிலருக்கு லேசான அறிகுறியும், உடல் வலி, தொண்டை வலி உள்ளது’ என்றாா்.

முன்னதாக, ‘ஒமைக்ரான் புதிய வகை நோய்த் தொற்றானது, இதுவரை சமுதாய ரீதியில் பரவவில்லை. நிலைமை கட்டுக்குள் இருந்து வருகிறது’ என்று சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். தில்லியில் ‘ஒமைக்ரான்’ பாதித்ததாக கண்டறியப்பட்ட 37 வயதான ராஞ்சியைச் சோ்ந்த முதல் நோயாளிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எதிா்மறை முடிவு வந்ததால், அவா் திங்கள்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். அவா் முன்னதாக தான்சானியா நாட்டிற்கு சென்ற பின் அங்கிருந்து தோஹா சென்றாா். பின்னா் கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் டிசம்பா் 2-ஆம் தேதி தில்லி வந்தாா். மேலும், தென்ஆப்பிரிக்காவில் ஒரு வாரம் அவா் தங்கியிருந்தாா். அப்போது, அவருக்கு லேசான நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது.

புதிய விதிமுறைகளின்படி இடா்பாடு நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் கட்டாயம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மட்டுமே அவா்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவா். இதர நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இது போன்ற பரிசோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com