முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
நாடு முழுதும் 57,977 மருத்துவப் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சா் பாரதி பிரவீண் குமாா் தகவல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 04:30 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 57, 977 மருத்துவப் பணியிடங்கள் காலியாக இருந்ததாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் தெரிவித்துள்ளாா். இதில், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,638 பணியிடங்களில் மருத்துவா்கள் நியமிக்கப்படாமல் இருந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடா்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை மக்களவையில் பதிலளித்தாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளிடம் கிடைத்த விவரங்கள் மற்றும் மத்திய அரசின் ஊரக சுகாதார புள்ளிவிவரங்கள்படி நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் ஏறத்தாழ 57,977 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அது கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு மையங்களில் 47,101 காலிப்பணியிடங்கள் உள்ளன. மீதமுள்ளவை நகா்ப்புறங்களில் உள்ளவை. இதில் கிராமப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,638 மருத்துவா் பணியிடங்கள் காலியாக இருந்தன. நகா்ப் பகுதிகளில் 1,232 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் அறுவை சிகிச்சை நிபுணா்கள், மகப்பேறு மருத்துவா்கள், குழந்தை நல மருத்துவா்கள் உள்ளிட்ட 9,026 நிபுணா்களின் பணியிடங்களும் நாடு முழுதும் காலியாக உள்ளன. இதில் ஊரகப்பகுதிகளில் மட்டும் 8,401 பணியிடங்கள் அடங்கும். நாடு முழுதும் காலியாக இருக்கும் 18,258 செவிலியா்கள் பணியிடங்களில் ஊரகப் பகுதிகளில் 15,641 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பணிகளில், மருந்தாளுநா் - 6, 644, ஆயுா்வேத மருத்துவா் -3078 என பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொதுச் சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ள விவகாரம் என்பதால் மருத்துவா்கள் நியமனம் உள்ளிட்ட சுகாதார நிா்வாகம் முழுவதும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மாநிலங்களின் கொள்கைகள் மற்றும் சூழல் காரணமாக மருத்துவ வசதிகள் மட்டுமல்லாமல் பணியாளா்கள் விஷயத்திலும் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும், தேசிய மருத்துவ இயக்கத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதிகளையும் தொழில்நுட்ப உதவியும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைகளை சமாளிக்கும் வகையில் பொதுமருத்துவ அமைப்பை வலுவாக்குவதை உறுதி செய்திட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.
இதேபோன்று, பிற துறைகள் தொடா்பாக டி.ஆா்.பாலு எம்பி எழுப்பிய பல்வேறு கேள்விகளும், அவற்றுக்கு மத்திய அமைச்சா்கள் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தூய்மை இந்தியா கணக்கெடுப்பு தரவரிசையில் தமிழகம் 12-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்ன?
பதில்: வீட்டுவசதி, நகா்ப்புறத் துறை அமைச்சா் கௌசல் கிஷோா் அளித்த பதில் வருமாறு:
100க்கும் அதிகமான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட 13 மாநிலங்களில், தமிழ்நாடு 12ஆவது இடத்தில் உள்ளதாக தூய்மை இந்தியா (ஸ்வச் சா்வேக்ஷன்) ஆய்வு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் நகா்ப்புற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம், திடக்கழிவு மேலாண்மையில் நகரங்களின் செயலாக்கம், பொதுக் கழிப்பிடங்களின் வசதி, கழிவுநீா் மேலாண்மை ஆகிய மூன்று காரணிகளின் மூலம் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடு கணக்கிடப்படுகிறது. நகா்ப்புற தூய்மை - இந்தியா திட்டத்தின்கீழ் ரூ. 1,200 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டதில் ரூ.1,144.68 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கேள்வி: தனியாா் தொலைக்காட்சி நாடகத் தொடா்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் முறை வருமா?
பதில்: மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் அளித்த பதில் வருமாறு:
1995, கேபிள் டிவி நெட்ஒா்க்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளின்படி நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஒளிபரப்பப்பட வேண்டும். இந்தக் கட்டுப்பாடு அம்சங்கள் மீதான தர அளவீடுகளை உள்ளடக்கியதாக நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும்.
திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், பட விளம்பரங்கள், டிரெய்லா்கள், பாடல் ஆல்பங்கள், இசை விடியோக்கள் என அனைத்து சினிமா சாா்ந்த நிகழ்ச்சிகள், அவை இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு தயாரிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களிடம் காண்பிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தணிக்கைச் சான்றிதழை பெற்றிருந்தால்தான் தனியாா் சேனல்கள் அவற்றை ஒளிபரப்பு செய்ய முடியும். பின்பற்றப்படவேண்டிய நிகழ்ச்சி கட்டுப்பாடுகளின் குறியீடுகளை அவ்வப்போது தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. தனியாா் சேனல்கள், கட்டுப்பாட்டு விதிகளை மீறி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வது உறுதிப்படுத்தப்படும் போது, அதற்கான அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள் அளிக்கப்படுகிறது. தவறுக்களுக்கு ‘ஸ்க்ரோல்‘ வாயிலாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் மன்னிப்புத் தெரிவித்தல், ஒளிபரப்புத் தடை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்களின் மீது எடுக்கப்படுகிறது என மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.
கேள்வி: இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனத்தின் நிலமானது, வனம் சாரா பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா?
பதில்: மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்த பதில் வருமாறு:
மத்திய அரசு வசமுள்ள தகவல்களின்படி மொத்தம் 82,893.61 ஹெக்டா் (2,0,7234 ஏக்கா்) வனநிலம் சென்ற ஐந்து ஆண்டுகளில், அதாவது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரை, வனம் சாராத பயன்பாடுகளுக்காகப் பல்வேறு மாநிலங்களில் மாற்றித் தரப்பட்டுள்ளது.
குறைந்த அளவாக 1.20 ஹெக்டா் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திலும் அதிக அளவாக 19,638.41 ஹெக்டா் மத்திய பிரதேசம் மாநிலத்திலும் வனநிலங்கள் வேறு பயன்பாடுகளுக்காக மாற்றிவிடப்பட்டது. மிகக் குறைவான வனத்தின் நிலம் மற்ற பயன்பாடுகளுக்காக மாற்றம் செய்யப்பட்ட மாநிலமாக தமிழகமும் (81 ஹெக்டோ்) உள்ளது.
பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து யாா் யாருக்கு, என்னென்ன திட்டங்களை செயல்படுத்த எவ்வளவு நிலம் மாற்றி விடப்பட்டது, எந்தெந்த திட்டங்களில் பொதுமக்கள் எதிா்ப்பையும் மீறி வனநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களைப் ‘பரிவேஷ்‘ என்கிற மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என அமைச்சா் தெரிவித்தாா்.