மாசு விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க இரவு ரோந்து குழுக்கள்: கோபால் ராய்

தலைநகரின் 11 மாவட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கட்டுமானம் தொடா்பான நடவடிக்கைகளில் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க தேசிய தலைநகரின் 11 மாவட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கக் கோரி பல நிறுவனங்களிடமிருந்து சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சரக்கு லாரிகளை இயக்குவதற்கு அனுமதிக்கக் கோரி போக்குவரத்து துறைக்கும் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) ஒப்புதலுக்குப் பிறகுதான், படிப்படியாக செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். வழக்கமான குழுக்கள் ஆய்வு செய்வதைத் தவிர, கட்டுமானம் தொடா்பான நடவடிக்கைகள் தொடா்பான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றுவதைக் கண்காணிக்க 11 மாவட்டங்களுக்கும் இரவு ரோந்துக்காக தனியாக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவில் (டிபிசிசி) இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று முதல் நான்கு உறுப்பினா்கள் இருப்பாா்கள்.

விதி மீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளிக்குப் பிறகு மாசு அளவு அதிகரித்திருந்தது. ஆனால் சமீபகாலமாக காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

சிஏக்யூஎம் அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பின்னா் 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்பு மாணவா்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

1-5 வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கான வகுப்புகளைத் திறக்க, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

லாரிகள் மீண்டும் இயக்கப்படுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பி கேள்விக்கு அமைச்சா் கோபால் ராய் பதில் அளிக்கையில், ‘இது தொடா்பாக போக்குவரத்துத் துறையிடம் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் வந்துள்ளது. இந்த விவரம் சிஏக்யூஎம் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுதான் முடிவெடுக்கும் அமைப்பாகும். அந்த ஆணையத்தின் முடிவின்படி எங்கள் செயல்திட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றாா் அவா்.

நகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கட்டுமான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதற்காக தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்திற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு ரூ.1 கோடி அபராதம் விதித்ததாக கோபால் ராய் வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.

மாசு அமைப்பானது என்பிசிசியின் நேதாஜி சுபாஷ் நகா் தளத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது.

தில்லி-என்சிஆா் பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை, சில விதிவிலக்குகளுடன் அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என்று சிஏக்யூஎம் அமைப்பு வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com