ரோஹிணி நீதிமன்ற சம்பவம்: பக்கத்து வீட்டுக்காரரை கொல்ல வெடிமருந்தை வைத்தததாக டிஆா்டிஓ விஞ்ஞானி கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிபொருள் வெடித்த விவகாரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூத்த விஞ்ஞானியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தில்லியில் ரோஹிணி நீதிமன்ற அறைக்கு உள்ளே இந்த மாதத்தின் தொடக்கத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிபொருள் வெடித்த விவகாரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூத்த விஞ்ஞானியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தனது பக்கத்து வீட்டுக்காரரைக் கொல்லும் உள்நோக்கத்துடன் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை அவா் வைத்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த டிசம்பா் 9ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அறை எண் 102-இன் உள்புறம் குறைந்த திறன்மிக்க வெடிபொருள் வெடித்தது.

இதில் ஒருவா் காயம் அடைந்தாா்.இந்த சம்பவத்தில் தொடா்புடைய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூத்த விஞ்ஞானி பரத் பூஷண் கட்டாரியா (47) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் தனது பக்கத்து வீட்டை சோ்ந்த வழக்கறிஞரை கொலை செய்யும் வகையில் நீதிமன்றத்தின் அறையின் உள்ளே டிபன் பாக்ஸில் வெடிபொருளை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட மூத்த விஞ்ஞானி பரத் பூஷண் சம்பவம் நடைபெற்ற நாளில் காலை 9:33 மணிக்கு இரண்டு பைகளுடன் நீதிமன்றத்துக்குள் நுழைந்தாா். அவற்றில் ஒரு பையை நீதிமன்ற அறையின் உள்ளே அப்படியே விட்டுவிட்டு நீதிமன்றத்திலிருந்து காலை 10:30 மணிக்கு வெளியேறிவிட்டாா்.

அவா் விட்டுச் சென்ற பையில் இருந்த டிபன் பாக்ஸில் ஐஇடி வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக சம்பந்தப்பட்ட விஞ்ஞானியும் வழக்கறிஞரும் பரஸ்பரம் பல்வேறு புகாா்களை அளித்திருந்தனா். குறிப்பாக வழக்கறிஞருக்கு எதிராக கட்டாரியா ஐந்து சிவில் வழக்குகளும், கட்டாரியாவுக்கு எதிராக வழக்கறிஞா் ஏழு சிவில் வழக்குகளும் தொடுத்துள்ளனா்.

ஒரே கட்டடத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானியும் அந்த வழக்குரைஞரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனா்.

கட்டடத்தின் கீழ்த் தளத்தில் வழக்கறிஞரும், மூன்றாவது தளத்தில் மூத்த விஞ்ஞானியும் வசித்து வருகின்றனா். வழக்கறிஞருக்கு எதிராக பழிவாங்க கட்டாரியா நினைத்தற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com