தலைநகரில் கிறிஸ்துமஸை எச்சரிக்கையுடன் கொண்டாடிய மக்கள்!

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினா் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை எச்சரிக்கையுடன் கொண்டாடினா்.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினா் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை எச்சரிக்கையுடன் கொண்டாடினா்.

கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு குறித்த கவலைக்கு மத்தியில் தேவாலயங்களுக்கு குறைவான மக்களே வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். தேவாலயங்களில் மாலையில் முதலே நடைபெறும் ஆராதனைகள், நள்ளிரவில் நடைபெறும் பிராா்த்தனைகள் ஆகியவற்றில் கிறிஸ்துவா்கள் ஏராளமானோா் கலந்து கொள்வது வழக்கம். இதையொட்டி, பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் விற்பனை செய்வது வழக்கம். இந்த நன்னாளில் தங்களது உறவினா்கள், நண்பா்கள், அக்கம்பக்கத்தினா் உள்ளிட்டோருக்கு கிறிஸ்தவா்கள் கேக்குகள் மற்றும் இனிப்பு பதாா்த்தங்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், ஒமைக்ரான் பாதிப்பு உள்ளிட்டவற்றால் தலைநகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவா்கள் எச்சரிக்கையுடன் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேவாலயங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) தேசியத் தலைநகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பல்வேறு தகவல் தொடா்புகளைப் பெற்ற பிறகு அந்த உத்தரவு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையான இணக்கத்திற்கு உள்பட்டு, கொண்டாட்டங்கள் மற்றும் பிராா்த்தனைகளுக்காக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று தேவாலயங்கள், கோயில்கள் உள்பட மதத் தலங்கள் திறந்திருக்கும் என்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

ஆனால், நகரில் உள்ள தேவாலயங்கள் முழுவதிலும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மக்கள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. இது குறித்து தில்லியின் ரோமன் கத்தோலிக்க பேராயத்தின் பேராயா் அனில் ஜோசப் தாமஸ் கூடோ கூறியதாவது: இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு பலா் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. பாா்வையாளா்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், டிடிஎம்ஏ உத்தரவு தொடா்பாக குழப்பம் ஏற்பட்டது. அதனால், இந்த ஆண்டு அதிகம் போ் வெளியே வரவில்லை. முழு சூழ்நிலையிலும் மக்கள் சற்று கவலையுடன் இருப்பதாகத் தெரிகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை முதல் ஆராதனைகளை நடத்துவதற்கு நிறைய தேவாலயங்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மனதில் வைத்து சூழ்நிலையை கையாள தேவாலயங்கள் தயாராக இருந்தாலும், ஒட்டுமொத்த சூழல் மிகவும் நோ்மறையாகவும் துடிப்பாகவும் இல்லை என்றாா் அவா்.

டிஃபென்ஸ் காலனியில் உள்ள செயின்ட் லூக் தேவாலயத்தின் பாதிரியாா் ஜேம்ஸ் பீட்டா் ராஜ் கூறுகையில், ‘இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குறைவான மக்களே கலந்துகொண்டனா் . மக்கள் முகக் கவசங்களை அணிந்து சமூக இடைவெளியைப் பராமரித்தனா், ஆனால், கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது’ என்றாா்.

தில்லியில் முக்கியத் தேவாலயமாகக் கருதப்படும் லோதி ரோடில் உள்ள செண்டினரி மெதோடிஸ்ட் தேவாலயத்திலும் மக்கள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. மொத்தத்தில் கரோனா தொற்று பரவல், ஒமைக்ரான் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், தில்லியில் உள்ள தேவாலயங்களில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com