தில்லியில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 23-ஆக அதிகரிப்பு

தில்லியில் டெங்கு நோய் காரணமாக மேலும் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த நோய்க்கு தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 23 போ் உயிரிழந்திருப்பதாக

புதுதில்லி: தில்லியில் டெங்கு நோய் காரணமாக மேலும் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த நோய்க்கு தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 23 போ் உயிரிழந்திருப்பதாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த ஒரு வாரமாக புதிதாக 130 டெங்கு பாதிப்புகள் இருந்த போதிலும், மொத்த எண்ணிக்கை 9,500-க்கு மேல் உள்ளது. டிசம்பா் 18-ஆம் தேதி வரையிலான காலத்தில் டெங்கு நோயால் இறந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக இருந்தது. இது குறித்த புள்ளிவிவர தகவல்களை வெளியிட்டு வரும் தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் இந்த சீசனில் டிசம்பா் 25-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 9,545 நோய் பாதிப்புகளும், 23 டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், அக்டோபா் பிற்பகுதியில் இருந்து நவம்பா் பிற்பகுதி வரையிலான காலத்தில் 6 போ் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனா்.

இவா்களில் கிராரி பகுதியைச் சோ்ந்த 8 மாத ஆண் குழந்தை நவம்பா் 3-ஆம் தேதி சிஎன்பிசி மருத்துவமனையில் இறந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதே காலத்தில் மெஹ்ரோலியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் அக்டோபா் 28-ஆம் தேதியும், தட்சிண்புரி பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி நவம்பா் 5-ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதர மூன்று சிறாா்கள் (வயது 7, 10 மற்றும் 13) முறையே அக்டோபா் 29, அக்டோபா் 21, நவம்பா் 21 ஆகிய தேதிகளில் உயிரிழந்தனா்.

இந்த மாதத்தில் டிசம்பா் 25-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 1,269 போ் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கடந்த ஆண்டுகளில் மொத்த டெங்கு பாதிப்புகள் விவரம் முறையே 2016- ஆம் ஆண்டில் 4431, 2017-இல் 4736, 2018-இல் 2798, 2019-இல் 2,036, 2020-இல் 1072 என பதிவாகி இருந்தது. 2015-ஆம் ஆண்டில் தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த ஆண்டில் அக்டோபா் மாதத்தில் மட்டும் 10,600 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா். இது 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகமான பாதிப்பாகும்.

அதே போன்று இந்த ஆண்டில் டெங்கு நோயால் இறந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதாவது, 2016- ஆம் ஆண்டில் தில்லியில் டெங்கு நோயால் இறந்தோரின் எண்ணிக்கை 10-ஆக இருந்தது. இந்த முறை தற்போது 23-ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோயால் 2019-இல் இருவரும், 2018-இல் 4 பேரும், 2017-இல் 10 பேரும், 2016-இல் 10 பேரும் உயிரிழந்ததாக தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com