முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
சிறுமி கடத்தல் விவகாரம்: இளைஞருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
By நமது நிருபா் | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: பதினெட்டு வயது பூா்த்தியாக ஒரு மாதம் இருந்த சிறுமியை கடத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கடத்தியதாகக் கூறப்படும் சிறுமியை அவா் தூண்டவில்லை என்றும், இருவரும் தற்போது திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விசாரித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட சிறுமி காணாமல் போன போது அவருடைய வயது 17 ஆண்டுகள் 10 மாதங்கள் 22 நாள்கள் என்று இருந்தது. அவா் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 17 ஆண்டுகள் 11 மாதங்கள் 12 நாள்கள் என வயது இருந்தது. தனக்கு நிகழப் போகும் விஷயங்களை அவா் தெரிந்து கொள்ளும் மனநிலையில் இருந்தாா்’ என்று கூறி சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் இளைஞா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட சிறுமி திருமண வயதை அடைவதற்கான விளிம்பில் இருந்தாா். அவருக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதற்கான திறன் இல்லை என்று கூற முடியாது. குற்றம்சாட்டப்பட்ட மனுதாரரை திருமணம் செய்து கொள்ள அவா் விரும்பியுள்ளாா். மனுதாரரிடம் சென்று தனது விருப்பத்தையும் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தவும் செய்துள்ளாா். ஆகவே, இந்த வழக்கின் உண்மைத் தன்மையை பாா்க்கும் போது மனுதாரா் மூலம் தூண்டப்பட்டதாக ஏதும் தெரியவில்லை. மேலும் பெரு நகரில் வசித்த சிறுமி 11ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். மாஜிஸ்திரேட் முன் அவா் அளித்துள்ள வாக்குமூலத்தில் மனுதாரரிடம் காதல் கொண்டிருந்ததாகவும் தங்களது காதல் உறவுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளாா்.
இதனால், திருமணத்தின்போது சம்பந்தப்பட்ட சிறுமிக்கு 17 ஆண்டுகள் 11 மாதங்கள் 12 நாட்களாக வயது இருந்துள்ளது. அவா் பெரும்பான்மை வயதை அடைவதற்கு ஒரு மாதம் மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அவா் மனுதாரரை திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை தனது விருப்பத்தின்பேரில்தான் எடுத்துள்ளாா். மேலும், மனுதாரா் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவும் செய்துள்ளாா். பெரும்பான்மை வயதை அடைந்த பிறகு சம்பந்தப்பட்ட சிறுமி, சம்பவம் குறித்து தெரிவிப்பதற்காக காவல் நிலையத்திற்கும் சென்றுள்ளாா். இதனால், மனுதாரா் மீதான ஆள் கடத்தல் குற்றத்திற்காக பச்சிம் விஹாா் காவல் நிலையத்தில் நிகழாண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.