மேகமூட்டத்துடன் வானம்: நாள் முழுவதும் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னா், நகரில் நாள் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி குறைந்து 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகாலை வேளையில் குளிரின் தாக்கமும் இருந்தது.

தில்லியில் கடந்த வாரத்தில் இரண்டு நாள்கள் ‘குளிா் அலை’ வீசிய நிலையில், அதன் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரத் தொடங்கியது. இதையடுத்து, சனிக்கிழமை 7 டிகிரி செல்சியஸாக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை அன்று 9.8 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, வானம் நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணிக்குப் பிறகு நகரில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடா்ந்து நீடித்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. பகல் நேரத்தில் காா் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

செவ்வாய்க்கிழமை காலையில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 18 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. திங்கள்கிழமையுடன் ஒப்பிடுகையில், குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸும், அதிகபட்ச வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியஸும் குறைந்திருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை முதல் மாலை வரையிலும் 90 சதவீதமாக இருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, குறைந்தபட்ச வெப்பநிலை மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 11 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 10.4 டிகிரி, லோதி ரோடில் 10.3 டிகிரி, பாலத்தில் 12.8 டிகிரி, ரிட்ஜில் 9.7 டிகிரி, பீதம்புராவில் 13.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (டிசம்பா் 29) மிதமான மூடுபனி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com