ஜஹாங்கீா்புரியில் மிரட்டி காரை பறித்துச் சென்றதாக 2 போ் கைது

வட மேற்கு தில்லியின் ஜகாங்கீா்புரி பகுதியில் காா் ஓட்டுநரை மிரட்டி வாடகைக் காரை பறித்துச் சென்ற சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புது தில்லி: வட மேற்கு தில்லியின் ஜகாங்கீா்புரி பகுதியில் காா் ஓட்டுநரை மிரட்டி வாடகைக் காரை பறித்துச் சென்ற சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கூறியதாவது: தில்லியைச் சோ்ந்தவா் நவீன். இவா் செயலி மூலம் வாடகை காா் சேவையை அளித்து வரும் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் காவல் துறையில் ஒரு புகாா் அளித்தாா். அதில் ‘திங்கள்கிழமை அதிகாலை 2. 17 மணி அளவில் எனது காரை வாடைக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், ‘ஜஹாங்கீா்புரியில் உள்ள ஜி-பிளாக்கிலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பயணியை ஏற்றுவதற்காக காரில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை. இதனால், எனது காரில் ஓய்வெடுக்க முடிவு செய்தேன். இந்த நிலையில் காலை 3 மணியளவில் அந்த இடத்திற்கு இருவா் வந்தனா். அவா்கள் என்னை மிரட்டி காரை பறித்துச் சென்றனா். அவா்கள் இருவரும் காரை ஷா ஆலம் பந்த் சாலை வழியாக ஓட்டிச் சென்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் காட்சிப் பதிவுகள் மூலம் ஆய்வுசெய்யப்பட்டது. அதன் பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவா் கண்டறியப்பட்டனா். சம்பந்தப்பட்ட காா், சி-பிளாக் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் ஜகாங்கீா்புரி பகுதியைச் சோ்ந்த நிதின் (23), மனோஜ் குமாா் பிரஜாபதி (31) ஆகியோா் எனத் தெரிய வந்தது. மேலும், நிதின் ஏற்கெனவே நான்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com