முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மெட்ரோ ரயில் நிலையங்கள் முன் 2-ஆவது நாளாக நீண்ட வரிசையில் பயணிகள்!
By நமது நிருபா் | Published On : 31st December 2021 07:42 AM | Last Updated : 31st December 2021 07:42 AM | அ+அ அ- |

தேசிய தலைநகரில் கரோனா பாதிப்பு பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், அதிகாரிகளால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தில்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
இதற்கிடையில், புத்தாண்டு தினத்தன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ராஜீவ் செளக் மெட்ரோ நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு வெளியேற பயணிகளை அனுமதிக்காமல் இருப்பது என தில்லி மெட்ரோ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். எனினும், புதிய கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக தில்லியில் இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூட்டம் குறைவாக இருக்கக்கூடும்.
ஒவ்வொரு ஆண்டும், புது தில்லியின் மையப் பகுதியான கனாட் பிளேஸில் உள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டி, புத்தாண்டுக் கொண்டாடட்டத்திற்காக இரவில் பொதுமக்கள் கூடுவா். இது குறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் கூறுகையில்,‘வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பா் 31) கூட்ட நெரிசலைக் குறைக்க, ராஜீவ் செளக் மெட்ரோ நிலையத்திலிருந்து இரவு 9 மணி முதல் வெளியேற அனுமதிக்கப்படாது. இருப்பினும், ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் புறப்படும் வரை பயணிகளின் நுழைவு அனுமதிக்கப்படும். பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என்றாா்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக லக்ஷ்மி நகா் மற்றும் அக்ஷா்தாம் ரயில் நிலையங்களுக்கு வெளியேயும், மற்ற ரயில் நிலையங்களிலும் புதன்கிழமை ஏராளமான பயணிகளின் நீண்ட வரிசைகள் காணப்பட்டனா். இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்பாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது. இதே போன்று, ஒமைக்ரான் அச்சுறுத்தலால் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், தில்லி கன்னாட் பிளேஸ் உள்பட பல்வேறு இடங்களில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.