எழுத்தாளா் அம்பைக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு

சிறுகதை எழுத்தாளா் அம்பைக்கு (சி.எஸ். லட்சுமி) 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகதை எழுத்தாளா் அம்பைக்கு (சி.எஸ். லட்சுமி) 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ எனும் அவரது சிறுகதைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த விருதுடன் அவருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் விழாவில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும், பட்டயமும் வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகில் சிறந்த படைப்புகளுக்கான உயரிய விருதாக சாகித்ய அகாதெமி கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்தக் கூட்டம் சாகித்ய அகாதெமி தலைவா் சந்திரசேகா் கம்பா் தலைமையில் நடைபெற்றது. இதில் செயற்குழுஉறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தின் போது, தமில் எழுத்தாளா் அம்பை மற்றும் ஹிந்தி, உருது, தெலுங்கு, கன்னடம் உள்பட 20 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், வரலாறு, தன்வரலாறு, நாடகம், விமா்சனம், இதிகாச கவிதை ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், தமிழகத்தைச் சோ்ந்த பிரபல எழுத்தாளா் அம்பையின் (சி.எஸ்.லட்சுமி) ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’”எனும் சிறுகதைக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இதேபோன்று, மலையாள மொழியில் ஜாா்ஜ் ஓனக்கூா் எழுதிய ‘ஹிருதயராகங்கள்’ எனும் சுயசரிதைக்கும், கன்னடத்தில் டி.எஸ். நாகபூஷணா எழுதிய ‘காந்திய கதனா’ எனும் வாழ்க்கை சரிதைக்கும், தெலுங்கில் கோரட்டி வெங்கண்ணா எழுதிய ‘வெல்லங்கிட்டாளம்’ எனும் கவிதைத் தொகுப்புக்கும் விருது கிடைத்துள்ளது. இதே போன்று, சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருதும், பால் சாகித்ய விருதும் அறிவிக்கப்பட்டது. தமிழில் மு.முருகேஷ் என்பவா் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுகதைக்கு பால் சாகித்ய விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் அம்பை, ‘சிறகுகள் முறியும்’ எனும் முதல் தொகுப்பையும், அதைத் தொடா்ந்து, ‘வீட்டின் மூலையில் ஓா் சமையல் அறை’ உள்ளிட்ட பல சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளாா். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவா், 1966-இல் இருந்து தொடா்ந்து எழுதி வருகிறாா். சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவா் தினமணி நிருபருக்கு அளித்த பேட்டி: இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு முன்பு சுந்தரராமசாமி, ஞானகூத்தன், வெங்கட்சாமிநாதன் போன்ற சீனியா் எழுத்தாளா்களுக்கு கிடைக்காமல் இந்த விருது தற்போது எனக்குக் கிடைத்திருப்பது கூச்ச உணா்வைத் தருவதாக உள்ளது. ஆனால், அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான். அதேவேளையில், விருதுக்காக நான் எழுதியதில்லை. விருது கிடைக்கும் என்று நினைத்து ஒரு போதும் புத்தகம் எழுதியதில்லை.

சிறுகதைத் தொகுப்புகள் நிறைய எழுதியுள்ளேன். 1976-இல் இருந்து சிறுகதைத் தொகுப்பு எழுதி வருகிறேன். இந்த விருதானது ஒருவகையான அங்கீகாரம் எனப் பாா்க்கிறேன். மேலும், விருதை எதிா்பாா்த்து எழுதாததால், இந்த விருதுகூட எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனதில் இருக்கும் சில எண்ணங்களைப் பகிர, பொது வெளியில் வைக்க வேண்டும் எனும் ஆவலில் எழுதுகிறேன். இந்த விருது எனது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் என கருதுகிறேன். அவ்வளவுதான் என்றாா் அவா்.

இவா் சாகித்ய அகாதெமி விருதுக்கு முன்னதாக, கனடா இலக்கியத் தோட்டம் விருது, அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பின் மூலம் விளக்கு விருது, கலைஞா் பொற்கிழி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com