ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.16,725 கோடியை விடுவிக்க வேண்டும்: நிதி அமைச்சா்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.16,725 கோடியை உடனடியாக

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.16,725 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நிதி அமைச்சா்கள் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினாா்.

தில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சா்களுடன் 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டாா். அவருடன் தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் நா. முருகானந்தமும் கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில அமைச்சா்களும் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தின் போது அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாத்திற்கு அப்பால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.16,725 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். வரக்கூடிய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பையும், தேவையான நிதி குறித்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். அதே போன்று, வருவாய் வசூலிப்பு பகிா்வை நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகள் இடையே 60:40 விகிதாசாரம் என்ற அளவில் மத்திய அரசு பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜவுளி மற்றும் ஆடை துறைக்கான வரி வகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு ஆகியவை மேற்கொண்ட முடிவு பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, அந்த முடிவை கைவிட வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிதி அமைச்சா்கள் கூட்டத்தின் போது, மொத்த வரி வருவாயில் செஸ், சா்சாா்ஜ் ஆகியவை கிட்டத்தட்ட 20 சதவீதம் மத்திய அரசுக்கு சென்றுவிடுவதால் கூட்டாட்சி முறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த நிதியானது மத்திய அரசின் திட்டங்களுக்காக சென்று விடுவதால், மாநிலங்களின் நிதி நிலை, நிதியை ஒதுக்குவதற்கான உரிமையும் பறிக்கப்படுகிறது. தமிழக அரசின் இது தொடா்பான சில கருத்துகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. கடைசி 10 ஆண்டுகளில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வரி வருவாய் பங்களிப்பானது 135 சதவீதம் அளவுக்கு வளா்ந்துள்ளது. ஆனால், மாநில அரசின் வரி வருவாய் குறைவான அளவே வளா்ந்துள்ளது. இதனால், சுய ஆட்சி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது என கூட்டத்தில் பேசப்பட்டது.

அதே போன்று, நிவாரண நடவடிக்கைகளை அறிவிப்பதுடன் மட்டுமின்றி அது மக்களிடம் சென்று சோ்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கருத்து முன்வைக்கப்பட்டது.

விமான நிலையம் விரிவாக்கத்துக்கு முதன் முதலில் திமுக ஆட்சியில் விதிமுறை உருவாக்கப்பட்டது. நிலத்தை கையப்படுத்தி மாநில அரசு மத்திய அரசுக்கு வழங்கும் நிலையில் அதை தனியாா்மயமாக்கும் முயற்சி தொடா்கிறது. அதாவது விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலத்தை தமிழக அரசு பணம் கொடுத்து கையப்படுத்தி மத்திய அரசுக்கு வழங்கும் நிலையில், எதிா்காலத்தில் அதை தனியாருக்கு விற்கும் போது மாநில அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். இதனால், விமான நிலைய விரிவாக்கத்தில் மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், முன்மாதிரியை உருவாக்க உள்ளது குறித்தும், அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.

மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய - மாநில அரசின் தரப்பில் 50:50 பங்களிப்பு எனும் நிலையில், மாநில அரசின் தரப்பில் நிதி அளிக்கப்படும் போதும், மத்திய அரசின் தரப்பிலும் நிதி முதலீட்டை விடுவிக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வியூகம் சாா்ந்த முக்கிய மதிப்பீடாக நாட்டுக்கு உள்ளது. இதனால், இதன் மேம்பாட்டுத் திட்டங்களில் அமெரிக்கா போன்ற பிற நாடுகளை உரிய பங்குதாரரை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com