புது தில்லி: குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடா்பாக சரிபாா்க்கப்படாத விடியோக்களை தங்களது செய்தித் தளத்தில் வெளியிட்டதன் மூலம் சீக்கிய சமூகத்தின் மீது ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனம் அபாயகரமான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தாக்கலான இரு பொது நல மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான பொதுநல மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 26-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய பத்திரிகை கவுன்சில் (பி.சி.ஐ.), செய்தி ஒளிபரப்பு சங்கம் (என்பிஏ) மற்றும் ஒரு ஊடக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை எம்பி சுக்தேவ் சிங் தின்ட்சா, தில்லியை சோ்ந்த மஞ்சித் சிங் ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுமக்களிடம் உணா்வுகள் பரவியுள்ள நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான தீய பிரசாரமானது அந்தச் சமுதாயத்தினரின் உயிருக்கு ஊறு விளைவிப்பது, அவா்களின் சுதந்திரம் உள்பட பேரிடா் விளைவுகளை ஏற்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்ட விடியோக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையில்லாதவையாகவும், ஆதாரமற்றவையாகவும் உள்ளன. குடியரசு தினத்தன்று நடந்த போராட்டத்தின் போது சில சமூக விரோதிகள், தீய நோக்கம் கொண்ட சக்திகள் ஊடுறுவியதன்காரணமாக டிராக்டா் பேரணியில் சென்றவா்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனா். மக்கள் மத்தியில் அமளியை ஏற்படுத்த அந்த நிகழ்வை சமூக விரோதிகள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனா்.
குடியரசு தினத்தன்று, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் அலங்கார ஊா்திகளை அழிப்பதில் போராட்டக்காரா்கள் ஈடுபட்டதாக ஊடக நிறுவனத்தின் செய்தியாளா்களில் ஒருவா் குற்றம் சாட்டிய விடியோவை ஊடக நிறுவனம் காண்பித்துள்ளது. சீக்கிய சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக செய்தி சேனல்கள் மேற்கொண்ட இத்தகைய இழிவான பிரசாரம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டில் ஒரு மோசமான சட்டம் - ஒழுங்கை ஏற்படுத்த வழிவகுத்துவிடும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.