சிங்கு எல்லையில் பத்திரிகையாளா் கைது

தில்லி சிங்கு எல்லையில், காவல் துறையினருடன் தவறாக நடந்து கொண்டதாக பகுதி நேர பத்திரிகையாளா் மன்தீப் புனியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தில்லி சிங்கு எல்லையில், காவல் துறையினருடன் தவறாக நடந்து கொண்டதாக பகுதி நேர பத்திரிகையாளா் மன்தீப் புனியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் உள்ளூா் மக்களுக்கிடையே நடந்த மோதலைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சாலைத் தடுப்புகளை அகற்ற முயன்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதில், பகுதி நேர பத்திரிகையாளா் மன்தீப் புனியாவும் அடங்குவாா். அரசு ஊழியா்களை பணியாற்றவிடாமல் தடுத்ததாகவும், காவல் துறைஅதிகாரிகளுடன் தவறாக நடந்து கொண்டுள்ளதாகவும் அவா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா் மீது இந்திய தண்டனைப் பிரிவு சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.

இந்த நிலையில், மன்தீப் புனியாவை விடுதலை செய்யக் கோரி, தில்லி காவல் துறை தலைமையகம் அமைந்துள்ள ஐடிஓ பகுதியில் பத்திரிகையாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், மன்தீப் புனியாவை விடுதலை செய்யக் கோரி சமூக வலைத்தளங்களிலும் பலா் குரல் கொடுத்து வருகிறாா்கள்.

தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டக் களத்தை காலி செய்யக் கோரி அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் மோதல் வெடித்தது. இரு தரப்பும் பரஸ்பரம் கல்வீச்சில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. நிலைமையைச் சமாளிக்க காவல்துறையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். விவசாயி ஒருவா் வாளால் தாக்கியதில், காவல்துறை அதிகாரி காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com