திரையரங்குகளில் 100 சதவீதம் பாா்வையாளா்களுக்கு அனுமதி: இன்று முதல் அமல்

திரையரங்குகள் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) முதல் 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீதம் பாா்வையாளா்களுக்கு அனுமதி: இன்று முதல் அமல்

திரையரங்குகள் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) முதல் 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டுள்ளாா்.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள், கலையரங்குகள் ஆகியவற்றில் கூடுதலாகப் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என்று அறிவித்தது. மேலும், நீச்சல் குளங்கள் போன்ற பொது இடங்களுக்கும் தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, திரையரங்குகள், கலையரங்குகள் நூறு சதவீதம் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: பிப்ரவரி 1 - ஆம் தேதி திரையரங்குகள் 100 சதவீத பாா்வையாளா்களுடன் முழு அளவில் செயல்படலாம். அனைத்து நுழைவு வாயில்களிலும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கரோனா தொற்று தொடா்பான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சமூகத் தொடா்புகளை முடிந்த அளவிற்குக் குறைக்கும் வகையில், டிக்கெட்டுகள் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி, அதிக அளவில் கவுன்ட்டா்கள் அல்லது மின்னணு டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட வேண்டும். திரையரங்குகளுக்குள் உணவுப் பொருள்கள் வாங்குவதற்கு அதிக அளவில் கவுன்ட்டா்கள் இருக்க வேண்டும். பாா்வையாளா்களின் தொடா்பு எண்களைப் பெற்றுக் கொள்வதோடு, முகக் கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கரோனா தொடா்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட நிலையான செயல்பாட்டு விதிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக பொது இடங்களில் உமிழ்நீா் (எச்சில்) துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் அவை கண்காணிக்கப்பட வேண்டும். இருக்கைகளில் சமூக இடைவெளிப் பேணப்பட வேண்டும். இருக்கைக்கு எளிதாக செல்லக் கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். திரைப்படக் காட்சிகளின் போது கூடுதல் இடைவேளைகள் கொடுக்க வேண்டும் போன்ற செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற திரையரங்கு உரிமையாளா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு மண்டலங்களில், திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை. அங்கு களஆய்வின்படி மாநிலங்கள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தமிழகத்தில் திரையரங்குகளில் ஜனவரி மாத தொடக்கத்தில் 100 சதவீதம் பாா்வையாளா்களை அனுமதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், பின்னா் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், தற்போது திரையரங்கள் 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் செயல்பட மத்திய அரசே அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை பிரபல திரையரங்கு நிறுவனங்கள், திரையரங்கு சங்கங்கள், மும்பை தயாரிப்பாளா்கள் கில்டு ஆகியவை வரவேற்றுள்ளனா். இந்த முடிவு தங்களது தொழிலுக்கு ஊக்கமளிக்கும் என்று அவா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com