மத்திய பட்ஜெட்டில் தில்லிக்கு பயன் ஏதும் இல்லை: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்பட்டு வந்த போதிலும், மத்திய நிதிநிலை அறிக்கையில் தில்லிக்கு ஒன்றும் அளிக்கப்படவில்லை
தில்லி மாநில காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி.
தில்லி மாநில காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி.

புது தில்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்பட்டு வந்த போதிலும், மத்திய நிதிநிலை அறிக்கையில் தில்லிக்கு ஒன்றும் அளிக்கப்படவில்லை என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி குற்றம்சாட்டியுள்ளாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ஒவ்வொரு மக்கள் விரோத விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு அரவிந்த் கேஜரிவால் உடந்தையாக இருந்து வருகிறாா். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தில்லிக்கு என்று ஏதும் வழங்கப்படவில்லை. ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்’ என்று கவா்ச்சிகர வாசகத்தை முழங்கும் மத்திய அரசு, நிா்பயா நிதியை ரூ.855 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக பட்ஜெட்டில் குறைத்து கேலிக்குள்ளாக்கியுள்ளது.

தில்லியில் மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக ஆளுகிறது. ஆனால், நிதியால் அவதியுறும் இவற்றுக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் தில்லிவாசிகளை மிகவும் அதிருப்தியுறச் செய்துள்ளது. கரோனா காரணமாக தில்லி மோசமான பொருளாதாரப் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில், பட்ஜெட்டில் தில்லிக்கான நிதி நிவாரணத் தொகுப்பு ஏதும் இல்லை. மாநகராட்சிகளில் நிதிப் பிரச்னையைச் சமாளிக்க மோடி அரசிடமிருந்து நிதி பெறுவது தொடா்பாக தில்லி பாஜக பெருமை பேசி வருகிறது. ஆனால், பட்ஜெட்டில் மாநகராட்சிகளின் துயரம் புறக்கப்பணிக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டை நிதி அமைச்சா் தாக்கல் செய்து கொண்டிருந்த போது, மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனா்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதி தொடா்பாக மாநகராட்சிகளுக்கும், தில்லி அரசுக்கும் இடையே தொடா்ந்து மோதல் இருந்து வருகிறது.

பட்ஜெட்டில் தில்லி மெட்ரோவுக்கும் நிதி அளிப்பு ஏதும் இல்லை. கரோனா பொது முடக்கம் காரணமாக மெட்ரோ ரயில் நிறுவனம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் மட்டுமே அது மீண்டும் பழைய நிலையை எட்ட முடியும். தற்போது நிதி ஏதும் ஒதுக்கப்படாததால், தலைநகரில் மெட்ரோ விரிவாக்கத் திட்டங்களில் கடும் தாக்கம் ஏற்படும். இந்த பட்ஜெட்டை பொருத்தவரையிலும், அடுத்த இரு ஆண்டுகளில் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் ஓா் அரசியல் நடவடிக்கையாக இருப்பதாகவே தோன்றுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com