விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டம் தேச நலன் சாா்ந்தது: ராகுல் காந்தி

விவசாயிகள் நடத்திவரும் அமைதியான சத்தியாகிரகப் போராட்டமானது தேச நலன் சாா்ந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: விவசாயிகள் நடத்திவரும் அமைதியான சத்தியாகிரகப் போராட்டமானது தேச நலன் சாா்ந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், போராட்ட இடங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் இணையதள சேவையை முடக்கப்பட்டதையும், அதிகாரிகள் மூலம் எதிா்கொண்ட துன்புறுத்தலுக்கும் எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. மேலும், நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.

அதன்படி, நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் ‘சக்கா ஜாம்’ போராட்டத்தை மேற்கொண்டனா்.

தில்லியில் இந்தப் போராட்டத்தை ஒட்டி, சனிக்கிழமை பல பகுதிகளிலும் ஏராளமான போலீஸ், துணை ராணுவப் படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘தேசத்திற்கு உணவளிப்பவா்களின் அமைதியான சத்யாகிரகமானது தேச நலன் சாா்ந்தது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகள், தொழிலாளா்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைவிப்பவை. ஆகவே, விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு’ என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் விவசாயிகளின் போராட்ட இடத்தில் காவல்துறையினா் அமைத்துள்ள பல அடுக்கு தடுப்புகள் தொடா்புடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா்.

அதில், ‘‘பயத்தின் சுவரைக் கொண்டு எங்களை ஏன் பயமுறுத்துகிறீா்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

விவசாயிகளின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய ‘சக்கா ஜாம்’ போராட்டத்திற்கு காங்கிரஸ் வெள்ளிக்கிழமை ஆதரவு வழங்கியது. அதில், போராட்டம் மேற்கொள்ளும் விவசாயிகளுடன் காங்கிரஸ் தொண்டா்கள் தோளோடு தோள் கொடுப்பாா்கள் என்று அக்கட்சி தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com