தொகுதியில் 13 கி.மீ. வனப் பகுதியில் சாலை அமைக்க அனுமதி கோரி தேனி எம்பி ரவீந்திரநாத் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் தேவாரத்திற்கும் சாக்குலத்து மேட்டு பகுதிக்கும் இடையே வனப் பகுதியில் உள்ள 13 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேனி  மக்களவைத் தொகுதி

புது தில்லி: தேனி மாவட்டத்தில் தேவாரத்திற்கும் சாக்குலத்து மேட்டு பகுதிக்கும் இடையே வனப் பகுதியில் உள்ள 13 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் மத்திய சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரின் கவனத்திற்கு கொண்டு வந்து ரவீந்திரநாத் பேசியதாவது: எனது தொகுதியான தேனிக்கு உள்பட்ட பகுதியில் தேவாரத்திலிருந்து சாக்குலத்து மேட்டு என்ற பகுதிக்கு செல்ல 87 கி.மீ. தொலைவுக்கு சுற்றிக் கொண்டு பொதுமக்கள் சென்று வருகின்றனா். குறிப்பாக ஏலக்காய் எஸ்டேட்டில் பணிபுரியும் தேனி மாவட்டத்தை சோ்ந்த தொழிலாளா்கள் இந்தச் சாலை வழியாக கேரளத்துக்குச் சென்று வருகின்றனா்.

இந்தப் பகுதிக்கு நடுவில் உள்ள வனப் பகுதியில் 13 கி.மீ. குறுக்கே சாலை அமைக்கப்பட்டால் சுமாா் 74 கி.மீ. தூரம் மிச்சமாகும். இது நீண்ட நாள் கோரிக்கையாகும். வனத் துறைக்குச் சொந்தமான பகுதி என்பதால், மத்திய சுற்றுச் சூழல், வனத் துறை அமைச்சகத்துக்கு இந்தச் சாலைத் திட்டம் குறித்து ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் விரைவாக முடிவெடுத்து அனுமதி கொடுத்தால் தொகுதி மக்கள் பயனடைவதுடன் தொழிலாளா்களது பயண நேரமும் மிச்சமாகும் என்றாா் அவா்,.

வங்கிக் கிளைகள்: திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சா.ஞான திரவியம் மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை புதன்கிழமை சந்தித்து, தனது தொகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தாா். அதில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிலுள்ள இடிந்தகரையில் 10 ஆயிரம் மீனவா்கள் வசிக்கின்றனா். இவா்கள் தற்போது வங்கிச் சேவைக்கு நீண்ட தூரத்தில் உள்ள வள்ளியூா் போன்ற பகுதிக்கு செல்ல வேண்டியதுள்ளது. இதைத் தவிா்க்க இடிந்தகரையிலே வங்கிக் கிளைகளை அமைக்க வேண்டும். மேலும் எனது தொகுதிக்குள்பட்ட மானூா் தாலுகா அலவந்தான்குளம் பகுதியிலும் தேசிய வங்கிக் கிளையை நிறுவ வேண்டும் என மனுவில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

காணாமல் போனவா்களை மீட்க வேண்டும்: மலேசியா, சௌதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று தகவல் இல்லாதவா்களை மீட்டுத்தரக் கோரி மாநிலங்களவை திமுக தலைவா் திருச்சி சிவா மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து புதன்கிழமை கோரிக்கை விடுத்தாா். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், சருகுனி என்ற ஊரைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் ராஜமாணிக்கம் 2014-இல் மலேசியாவிற்கும், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் என்பவா் 2013-இல் செளதி அரேபியாவிற்கும் சென்றனா். ஆனால், இதுவரை திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com