தில்லி பாஜக தலைமையகம் கட்டுவதற்கு விதிமுறைகளை மீறி டிடிஏ நிலம் ஒதுக்கீடு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி தீன தயாள் உபாத்யாய் மாா்க்கில் தில்லி பாஜக தலைமையகம் கட்டுவதற்கு விதிமுறைகளை மீறி டிடிஏ நிலம் ஒதுக்கியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், கிரேட்டா் கைலாஷ் தொகுதி எம்எல்ஏவுமான செளரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை அளித்த பேட்டி: தில்லி தீன தயாள் உபாத்யாய் மாா்க்கில், தில்லி பாஜக அலுவலகம் கட்ட 10 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) வழங்கியுள்ளது. தீனதயாள் உபாத்யாய் மாா்க் தில்லியில் உள்ள முக்கியப் பகுதியாகும். இங்கு ரூ.2 கோடிக்கு 10 சதுர அடிகளைக் கூட வாங்க முடியாது. ஆனால், பாஜகவுக்கு 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு டிடிஏ வழங்கியுள்ளது. தில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு அவ்வளவு பெரிய இடத்தை வழங்காத போது, வெறும் 8 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துள்ள பாஜகவுக்கு இந்த நிலம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது? தீன தாயள் உபாத்யாய் மாா்கில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தை அந்த இடத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு பல தடவைகள் முயற்சி செய்தது. மின் கட்டணமாகப் பெரும் தொகையை வசூலித்தது என்றாா் அவா்.

பாஜக மறுப்பு: ஆனால், ஆம் ஆத்மி கட்சியியக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாஹல் கூறுகையில், ‘தில்லி பாஜக அலுவலகம் கட்டுவதற்கு தீன தயாள் உபாத்யாய் மாா்க்கில் 809 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி குற்றம் சாட்டுவது போல, 10 ஆயிரம் சதுர அடி அல்ல. தில்லி பாஜகவுக்கு அலுவலகம் கட்ட கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடா்பாக அதே ஆண்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தோம். இதைத் தொடா்ந்து, கடந்த 2010, மே 12-ஆம் தேதி இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. 2020-இல் ஒதுக்கப்படவில்லை. தீன தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம்தான் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அங்குதான் விதிகள் மீறப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com