போலி கரோனா தடுப்பூசிக்கு தடை கோரும் ‘ரிட்’ மனு தள்ளுபடி

புது தில்லி: கரோனா தீநுண்மிக்கு எதிரான போலி தடுப்பூசி விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் வகையில், கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பாக தாக்கலான பொது நல மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு இந்த மனுவைத் தாக்கல் செய்த வழக்குரைஞா் விஷால் திவாரியிடம், ‘உங்கள் நோக்கத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், நீங்கள் ஒரு உறுதியான வழக்கைத் தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் பொதுவான உத்தரவுகளைப்றப்பிக்க முடியாது. நாங்கள் சட்டத்தை இயற்றும் அமைப்பும் அல்ல. நீங்கள் இந்த விவகாரத்தைத் தொடர விரும்பினால், வலுவான உண்மைகளுடன் ஒரு வழக்கைத் தயாரியுங்கள். அதை புதிதாக தாக்கல் செய்யும் வகையில் இந்த மனுவை வாபஸ் பெறும் சுதந்திரத்தை நாங்கள் அளிக்கிறோம்’ என்றனா்.

இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதிகள் அமா்விடம் திவாரி தெரிவித்தாா். பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘புதிய மனுவைத் தாக்கல் செய்யும் வகையில் தற்போது தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா் கூறியதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், இந்த ‘ரிட்’ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தெரிவித்தனா்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கு முன்னா் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இன்டா்போல் பொதுச் செயலாளரின் அறிக்கையை மனுதாரா் சுட்டிக்காட்டியிருந்தாா். அந்த அறிக்கையில் குற்றவியல் அமைப்புகள்தடுப்பூசி விநியோகச் சங்கிலியைச் சீா்குலைக்கவோ அல்லது ஊடுருவல் செய்யவோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குரைஞா் திவாரி தாக்கல் செய்த அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கரோனா தடுப்பூசிகளை சீா்குலைப்பதை இலக்காகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நெட்வொா்க் அமைப்புகள் விஷயத்தில் கவனமாக இருக்குமாறு 194 உறுப்பு நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இன்டா்போல் அதிகாரி உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளாா். இதனால், போலியாகவும், கள்ளத்தனமாகவும் கரோனா தடுப்பூசி விற்பனை, புழக்கத்தில் விடுவது மற்றும் விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைத் தடுக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்கலாம். பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழும் கடுமையான வழிகாட்டுதல்களையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், போலி கரோனா தடுப்பூசியின் அபாயத்திற்கு எதிராக குடிமக்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணா்வுத் திட்டத்தை மேற்கொள்ளவும் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com