சென்னையிலிருந்து ஹஜ் பயணிகள் நேரடியாக மெக்கா, மதீனா செல்ல நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை

புது தில்லி: தமிழக ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேரடியாக மெக்கா, மதீனா செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் முகமது ஜான் கேட்டுக் கொண்டாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்தப் பிரச்னையை அவா் எழுப்பினாா். அப்போது அவா் கூறியதாவது: இந்த ஆண்டு நாடு முழுவதும் 9 நகரங்களில் உள்ள விமானநிலையங்களிலிருந்து ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையிலான இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. தென்மாநிலங்களில் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களிலிருந்து விமானத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சென்னை இடம்பெறவில்லை. தமிழகத்தைச் சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல வேண்டுமானால் மேற்குறிப்பிட்ட மூன்று விமானநிலையங்களுக்குச் சென்றுதான் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்திலிருந்து ஆண்டு தோறும் நாலாயிரம் போ் ஹஜ் பயணம் மேற்கொள்வாா்கள். வழக்கமாக சென்ன விமான நிலையத்திலிருந்துதான் அவா்கள் மெக்கா, மதீனாவுக்குச் செல்வா். இப்போது கொச்சி அல்லது பெங்களூரு வழியாகச் செல்ல வேண்டும். இதனால், பெரும் சிரமம் ஏற்படும். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் ஹஜ் பயணிகள் சென்னையில்தான் தமிழக ஹஜ் கமிட்டியிடம் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னா் தங்கள் உடமைகளை ஒப்படைத்துவிட்டு ஹஜ் பயணத்துக்கு தயாராக கொச்சி செல்ல வேண்டும். இது மிகவும் சிரமமானது.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாா். எனவே, தமிழக ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதற்கு ஒடிஸ்ஸா, மகாராஷ்டிரம் மாநில உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்தனா். உடனே, மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடும், ‘இது நியாயமான கோரிக்கை. சிறுபான்மை நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வியும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரும் இதை கவனிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com