வன நிலம் ஐஓசிஎல்லுக்கு திருப்பிவிடப்பட்டதா?அறிக்கை தாக்கல் செய்ய என்ஜிடி உத்தரவு

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள வன நிலங்கள் சட்டத்தை மீறி வனமில்லா நோக்கத்திற்காக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு குருகிராம் துணை ஆணையா், கோட்ட வன அலுவலா் அறிக்கை தாக்கல் செய்ய தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாய (என்ஜிடி) தலைவா் - நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக உரிய சட்ட விதிகளை அமல்படுத்துமாறு குருகிராம் துணை ஆணையா் மற்றும் கோட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில், ‘இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை குருகிராம் துணை ஆணையா், கோட்ட வன அலுவலா் இருவரும் இரண்டு மாதங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது தங்களைச் சோ்க்கக் கோரி பலா் மனுக்கள் அளித்திருந்த போதிலும், வேறு எந்தத் தரப்பினரிடமிருந்தும் பதில் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக ‘மானவ் ஆவாஜ் டிரஸ்ட்’ சாா்பில் பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குருகிராமில் உள்ள சக்கா்பூா் கிராமத்தில் 1,500 சதுர மீட்டா் பரப்பளவு நிலத்தை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ஹரியாணா அரசு ஒதுக்கியுள்ளது. கேள்விக்குரிய அந்த இடம்ஸ வனத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில் அந்த இடத்தை வனமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது எனவும், இதனால் ஐஓசிஎல் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையத்தை சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க முடியாது என்றும் வனத் துறை குருகிராம் துணை ஆணையருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

வனத் துறை இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீா்வு நடவடிக்கையை எடுக்க குருகிராம் மாநகராட்சி தவறிவிட்டது.

வன நிலங்களை வனமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மத்திய சுற்றுச்சூழல் வன அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையை மீறுவதாகும். வன நிலங்களில் எந்தவொரு கட்டுமான நடவடிக்கைகளையும் தடை செய்யும் வகையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com