எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை வலியுறுத்தினாா். இதற்கான நிதியை உயா்த்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021-22-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்த விவாதத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை வியாழக்கிழமை பேசியதாவது: தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை மீண்டும் தொடர வேண்டும். அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் இதில் ஒருமித்த கருத்தோடு உள்ளனா். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி என ஒதுக்கப்பட்ட தொகையை ரூ.25 கோடியாக உயா்த்தி இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

கேரளம் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டபேரவை உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. வேண்டுமானால் இந்தத் திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்கு பதிலாக உறுப்பினா்கள் பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. இதேபோல மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவைக்கும் திருச்சிக்கும் கரூா் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு 8 வழிச்சாலை திட்டத்தை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. இதன் மூலம் திருச்சியை கோவையிலிருந்து 2 மணி நோரத்தில் அடைய முடியும். நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கும் உடனடியாக நிதியை ஒதுக்கித் தருமாறு நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். இதே போன்று கிருஷ்ண கிரி வழியாக ஜோலாா்பேட்டையிலிருந்து பெங்களூா் செல்லும் ரயில் பாதை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிா்வாகம்’ என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உகந்தது அல்ல. வறுமை ஒழிப்பு, ஊரக வளா்ச்சி, சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை செயல்படுத்த அதிகபட்ச அரசு தேவைல. அரசு பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டுமே தவிர, முதலீடுகளைத் திரும்பப்பெறக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஊக்குவித்து அதிக வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com