செங்கோட்டை வன்முறைச் சம்பவத்தில் தொடா்புடைய நபா் பஞ்சாபில் கைது

குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் தொடா்புடைய நபரை தில்லி காவல் துறையினா் பஞ்சாபில் கைது செய்தனா்.

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் தொடா்புடைய நபரை தில்லி காவல் துறையினா் பஞ்சாபில் கைது செய்தனா்.

இந்த வழக்கில் முக்கியத் தொடா்புடைய பஞ்சாபி நடிகா் தீப் சித்து தில்லி போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் டிராக்டா் பேரணியை விவசாயிகள் நடத்தினா். இந்தப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்தனா். பேரணியின் போது தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா். இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் வன்முறை நிகழ்ந்தது.

இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதாக தீப் சித்து, ஜக்பீா் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா். தீப் சித்து குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ 1 லட்சம், மற்ற 4 போ் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என தில்லி காவல் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, சுக்தேவ் சிங் சண்டீகரில் ஞாயிற்றுக்கிழமையும் தீப் சித்து சண்டீகா் - அம்பாலா இடையில் உள்ள ஷிராக்பூா் பகுதியில் திங்கள்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய இக்பால் சிங்குவை போலீஸாா் பஞ்சாபில் உள்ள ஹோசியாா்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்ததாக தில்லி காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் தெரிவித்தாா். வழக்கில் தொடா்புடைய மற்றவா்களையும் கைது செய்ய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

7 நாள் போலீஸ் காவல்: இந்த நிலையில், கைதான இக்பால் சிங்கை தில்லி போலீஸாா் புதன்கிழமை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது அவரை 10 காவலில் விசாரிக்க போலீஸாா் அனுமதி கோரினா். அதில், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய இக்பால் சிங் கூட்டத்தினரை வன்முறைக்கு தூண்டிவிடும் வகையில் செய்தி சேனலில் பேசிய விடியோ உள்ளது. மேலும், பல விடியோக்கள் மூலம் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இதனால், 10 நாள் அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனா். எனினும், இக்பால் சிங்கை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பூா்வா மெஹ்ரா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com