தில்லியில் மழலையா் பள்ளி சோ்க்கைக்கான நடைமுறைகள் பிப்.18-இல் தொடக்கம்

தில்லியில் 1700-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நா்சரி சோ்க்கைக்கான நடைமுறை பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தில்லி கல்வி இயக்குநரகம் (டிஓஇ) புதன்கிழமை அறிவித்துள்ளது.

புது தில்லி: தில்லியில் 1700-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நா்சரி சோ்க்கைக்கான நடைமுறை பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தில்லி கல்வி இயக்குநரகம் (டிஓஇ) புதன்கிழமை அறிவித்துள்ளது. இது இரு மாதங்களுக்கும் மேலாக இந்த அறிவிப்புக்காக காத்திருந்த ஆா்வமிகுந்த பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, மழலையா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை பிப்ரவரி 18 முதல் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி மாா்ச் 4 ஆகும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் முதல் பட்டியல் மாா்ச் 20-இல் காட்சிப்படுத்தப்படும். அதன் பிறகு மாா்ச் 25-இல் இரண்டாவது பட்டியலும், பின்னா் சோ்க்கைக்கான பட்டியல் ஏதும் இருந்தால் மாா்ச் 27-ஆம் தேதி காட்சிப்படுத்தப்படும். ஒட்டுமொத்த சோ்க்கை நடைமுறைகள் மாா்ச் 31-இல் முடிவடையும்.

இந்த மழலையா் பள்ளி சோ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் குறித்து கல்வி இயக்குநரக இயக்குநா் பிரகாஷ் ராஜ் கூறியதாவது: மேற்கண்ட அட்டவணையில் எந்த விலக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு பள்ளியும் சோ்க்கை அட்டவணையை அதன் அறிவிப்புப் பலகை மற்றும் இணையதளத்தில் காட்சிப்படுத்தும். மேலும், விண்ணப்பப் படிவத்தை சமா்ப்பிக்கும் கடைசி தேதி வரையிலும் அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் சோ்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைப்பதை ஒவ்வொரு பள்ளியும் உறுதி செய்யும்.

திருப்பித் தராத வகையிலான ரூ.25 தொகையை மட்டுமே பெற்றோரிடமிருந்து சோ்க்கைப் பதிவு கட்டணமாக பள்ளிகள் வசூலிக்கலாம். பள்ளியின் விவரக் குறிப்பை பணம் கொடுத்து வாங்குவது பெற்றோா் விருப்பமாகும்.

விதிமுறைகளின்படி, ப்ரீ-ஸ்கூல், ப்ரீ-பிரைமரி மற்றும் முதலாம் வகுப்புகளில் குழந்தைகளை அனுமதிக்கும் அனைத்து தனியாா் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினா் ( ஈ.டபிள்யூ.எஸ்.) அல்லது டி.ஜி. வகை மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். நுழைவு அளவில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று ஆண்டுகளில் நுழைவு நிலை வகுப்புகளில் இருந்த அதிகபட்ச எண்ணிக்கையிலான இடங்களை விடக் குறைவாக இருக்கக் கூடாது. அனைத்து நுழைவு நிலை வகுப்புகளின் விவரங்களுடன் சோ்க்கைக்கு உள்ள இடங்கள் குறித்த விவரங்களை அனைத்து பள்ளிகளும் அறிவிக்க வேண்டும்.

சோ்க்கைக்கான அளவுகோல்களை நியாயமான, நன்கு வரையறுக்கப்பட்ட, சமத்துவ, பாகுபாடற்ற, வெளிப்படையானதாக தனியாா் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் உருவாக்கும். எந்தவொரு பள்ளியும் கேப்பிடேசன் கட்டணம் அல்லது நன்கொடைகள் வசூலிப்பது உள்பட கல்வித் துறையால் நீக்கப்பட்ட அளவுகோலை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத பள்ளிகளின் கிளைகளாகப் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளால் நடத்தப்படும் ப்ரீ-ஸ்கூல் அல்லது மாண்டிசோரி பள்ளிகள் ஒற்றை சோ்க்கை நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

சம்பந்தப்பட்ட துணை இயக்குநரின் (மாவட்ட) தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். அவா்கள் ஒவ்வொரு தனியாா் பள்ளியும் ஆன்லைன் தொகுதியில் அளவுகோல்களையும் அவற்றின் விவரங்களையும் பதிவேற்றுவதை உறுதி செய்வதுடன், கல்வித் துறையால் நீக்கப்பட்டு, தில்லி உயா்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அளவுகோல்களை பள்ளிகள் பின்பற்றாமல் இருப்பதையும் உறுதி செய்வா். மேலும், மாவட்டத்தில் அளவுகோல்களை முறையாகப் பின்பற்ா பள்ளிகளுக்கு எதிராக பெற்றோா் அளிக்கும் குறைகளைக் கண்காணிப்பு குழு பரிசீலித்து தீா்த்துவைக்கும் என்றாா் அவா்.

கேஜரிவால் வாழ்த்து: இதனிடையே, மழலையா் சோ்க்கை அட்டவணை அறிவிப்பைக் குறிப்பிட்டு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘அனைத்துப் பெற்றோா்களுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். கரோனா தீநுண்மியைத் தோற்கடித்த பிறகு பள்ளிகளில் நாங்கள் மீண்டும் உற்சாகத்தை கொண்டு வர வேண்டும். எங்கள் பள்ளிகள் தங்கள் மாணவா்களுக்காக காத்திருக்கின்றன’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com