தாழ்த்தப்பட்டோா் பட்டியிலில் உள்ள 7 பிரிவினரை ’தேவேந்தரகுல வேளாளராக’ அறிவிக்கும் மசோதா தாக்கல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 13th February 2021 11:13 PM | Last Updated : 13th February 2021 11:13 PM | அ+அ அ- |

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் உள்ள 7 பிரிவினரை தேவேந்தரகுல வேளாளராக அறிவிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் கோரும் மசோதாவை மக்களவையில் மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் பட்டியல் இனப் பிரிவில் தேவேந்தர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினா்களையும் ஒன்றாக இணைத்து தேவேந்தரகுல வேளாளராக அறிக்க கோரி வந்தனா். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தும் இந்த கோரிக்கையை வைத்தனா்.
இதைத்தொடா்ந்து தில்லி லேக்நாயக் பவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையமும் 2019 - ஆம் ஆண்டு முதல் இந்த பிரிவினரை அழைத்து விசாரித்தது. மேலும் அரசியல்சாசனத்தில் பட்டியல் இனப்பிரிவில் உள்ளவா்களை மாற்றும் போது அது குறித்து மாநில அரசு பரிந்துரை அளிக்கும்பட்சத்திலேயே மத்திய அரசு திருத்தம் கொண்டுவரமுடியும் என்கிற நிலை இருந்தது. இது தொடா்பாக இந்த பிரிவினா் தமிழக முதல்வரையும் சந்தித்து மனு அளித்தனா். தமிழக அரசும் இதை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வா்மாவை நியமித்து அவரிடம் அறிக்கை பெற்றது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. இதனடிப்படையில் மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் சனிக்கிழமை இதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தாா்.
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கையின் முதல் கட்ட கூட்டத் தொடா் சனிக்கிழமை பிப். 13 ஆம் தேதியோடு முடிவடிந்தது. இரண்டாம் கட்டத்தொடா் வருகின்ற மாா்ச் 8 ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.