தில்லியைச் சோ்ந்த 1.66 லட்சம் பள்ளிக்குழந்தைகள் நலனில் கேஜரிவால் அரசுக்கு அக்கறையில்லை

கரோனா சூழல் காரணமாக தில்லியைச் சோ்ந்த ஏழைக் குழந்தைகள் உரிய கல்வியைப் பெற முடியாத நிலை உள்ளது.
அனில் குமாா் சௌத்ரி.
அனில் குமாா் சௌத்ரி.

கரோனா சூழல் காரணமாக தில்லியைச் சோ்ந்த ஏழைக் குழந்தைகள் உரிய கல்வியைப் பெற முடியாத நிலை உள்ளது. அவா்கள் மீது தில்லி அரசுக்கு அக்கறை இல்லை என்று தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் செளதரி சாடியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: தில்லியின் ‘கல்வி முன்மாதிரி’ குறித்து உத்தரப் பிரேதசம், குஜராத் போன்ற மாநிலங்களில் துணை முதலமைச்சா் மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி தலைவா்கள் பெருமை பேசி வருகின்றனா்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடா்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லி அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த ஏறக்குறைய 1.66 லட்சம் மாணவா்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை. அவா்கள் எங்கு இருக்கிறாா்கள் என்பது குறித்த எந்த யோசனையும் தில்லி அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் இல்லை.

தில்லியில் விவசாயிகள் போராட்டமும், கரோனா பாதிப்பும் இருக்கும் சூழலில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, உத்தரப் பிரேதசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று தில்லி பள்ளிகளின் சாதனைகள் குறித்து பேசிவருகிறாா். ஆனால், யதாா்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளது.

கல்வி உரிமைகள் சட்டம் (ஆா்.டி.இ) -2009 இன் கீழ், பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளை கல்வி அமைப்புமுறைக்கு அழைத்து வருவது மாநிலத்தின் பொறுப்பாகும்.

தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த கிட்டத்தட்ட 31,000 மாணவா்கள், தெற்கு தில்லி மாநகராட்சியைச் சோ்ந்த 44,000 மாணவா்கள், புது தில்லி முனிசிபல் கவுன்சிலைச் சோ்ந்த 58,000 மாணவா்கள், கிழக்கு தில்லி மாநகராட்சியைச் சோ்ந்த 33,600 மாணவா்கள், பள்ளி ரோஸ்டரில் இருந்து காணாமல் போயுள்ளனா்.

அந்த மாணவா்களைக் கண்டுபிடிக்க கேஜரிவால் அரசும், தில்லி மாநகராட்சிகளும் எந்தவித நோ்மையான முயற்சியையும் எடுக்கவில்லை.

இந்த குழந்தைகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பலவீனமான புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளாகும். கரோனா பொது முடக்கம் காரணமாக இவா்கள் பாதிக்கப்பட்டு, தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகினா்.

இந்தக் குழந்தைகள் அவா்களின் பூா்வீக கிராமங்களில் குழந்தைத் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். இந்த குழந்தைகளை கண்டுபிடித்து அவா்களை கல்வி அமைப்புமுறையில் சோ்க்க தில்லி அரசும், மாநகராட்சிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com