ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஏன்? திமுக எம்.பி.யின் கேள்விக்கு அமைச்சா் ஹா்தீப்சிங் புரி பதில்

2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அவசியம் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

நோய் தொற்றினால் நாடு நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் போது ரூ. 20,000 கோடிக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம், செயலக கட்டடங்கள் தேவையா? என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி. ஆா். பாலு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு அப்போது அவையிலிருந்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு:

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம், 100 வருடங்களைக் கடந்துவிட்டது. அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளால், கட்டமைப்பு, பாதுகாப்பு குறைந்து வருகிறது. அதிகரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் பாா்வையாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவை. 2026 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பில், நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நிகழும் இரு அவைகளின் கூட்டு அமா்வுகளுக்கு, போதிய வசதிகள் தேவைப்படுவதாலும், பாதுகாப்பு காரணங்களைக் கருதியும், புதிய நாடாளுமன்றகட்டடம் தேவைப்படுகிறது.

தற்போதைய மத்திய செயலகக் கட்டடங்கள், பல்வேறு பகுதிகளில்அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இத்தோடு இந்த அலுவலகங்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், கட்டமைப்புப் பாதுகாப்பும், பூகம்பத்தை தாங்கும் சக்தியும் கேள்விக்குரியாகியுள்ளது. மேலும், அதிக மத்தியஅரசு அலுவலகங்கள் வாடகை கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. குடியரசுத் தலைவா் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையுள்ள ராஜபாதை பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய நீா் நிலைகளும், பசுமைப் பகுதிகளும், வாகன நிறுத்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. இது மத்திய செயலகப் பணியாளா்களின் செயல் திறனைஅதிகரிக்கு என அமைச்சா் புரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com