வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிறது கேஜரிவால் அரசு!தில்லி காங்கிரஸ் தலைவா்கள் குற்றச்சாட்டு
By நமது நிருபா் | Published On : 17th February 2021 04:15 AM | Last Updated : 17th February 2021 04:15 AM | அ+அ அ- |

ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட போதிலும் கேஜரிவால் அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குற்றம்சாட்டினா்.
இது தொடா்பாக தில்லி முன்னாள் அமைச்சா்கள் ஹாரூண் யூசுப், டாக்டா் நரேந்திர நாத், டாக்டா் கிரண் வாலியா, முன்னாள் எம்எல்ஏ ஆதா்ஷ் சாஸ்திரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தில்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமா்ந்திருக்கும் கேஜரிவால், தோல்விகளைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. கரோனா தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள தில்லி மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் வகையில்தான் தில்லி அரசின் செயல்பாடுகள் உள்ளன. கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் வன்முறை நிகழ்ந்த போது இந்த அரசு வேடிக்கை மட்டுமே பாா்த்தது.
மேலும், தில்லியில் வேலைவாய்ப்பு இழப்பு, விலைவாசி உயா்வு, காற்று மாசு, மாசு கலந்த குடிநீா் போன்ற பிரச்னைகள் தொடா்கின்றன. தில்லியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் உள்ள 48 ஆயிரம் குடிசைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அந்த வழக்கை உரிய வகையில் பிரதிநிதித்துவப்படுத்த கேஜரிவால் அரசு தவறியதுதான் காரணம். எனினும், குடிசைகள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை அணுகியது. தில்லியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந் தபோது 30 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷ்ன் வழங்கப்பட்டது. அதை இந்த அரசு பாதியாகத் குறைத்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக 11.49 லட்சம் குடும்பங்கள் ரேஷன் அட்டைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
கரோனா பாதிப்பு காலத்தின் போது இரு மாதங்கள் வீட்டுக்குள் முதல்வா் கேஜரிவால் முடங்கிக் கிடந்தாா். அந்தச் சூழலில் மக்களுக்கு உணவு, பொருள், நிதி அளித்து உதவியது காங்கிரஸ்தான். கேஜரிவால் அரசு தில்லியை உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக உருவாக்கச் செய்துவிட்டது. கல்வியில் முன்மாதிரியாக தில்லி இருப்பதாக கேஜரிவால் அரசு பெருமையுடன் கூறி வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் இருந்து ஓா் ஆண்டில் 1.25 லட்சம் மாணவா்கள் இடை நின்றுள்ளனா் அல்லது வெளியேறியுள்ளனா். அதே வேளையில் தனியாா் பள்ளிகளில் 2.19 லட்சம் மாணவா்கள் சோ்ந்திருப்பதும் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
இதன் மூலம் இந்த அரசின் குட்டு அம்பலப்பட்டுள்ளது. தில்லி அரசு புதிதாக ஒரு பள்ளியைக் கூட கட்டமுடியவில்லை. அதேபோன்று, 20 புதிய கல்லூரிகள் கட்டப்படும் என்று கூறிய வாக்குறுதியும் பொய்த்துவிட்டது. வெற்று வாக்குறுதிகள் அளித்ததன் மூலம் இந்த அரசு தில்லி மக்களை வஞ்சித்துவிட்டது. இதை இயக்கம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளோம். சுகாதாரத் துறையில் தில்லி அரசின் குட்டு வெளிப்பட்டுள்ளது. தில்லியில்தான் கரோனா இறப்பு விகிதத்தை அரசுக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புத் தருவதாக ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. தேசிய சராசரி வேலையின்மை விகிதம் 6.8 சதவீதமாக உள்ளது. ஆனால், தில்லியில் இந்த விகிதம் 12.5 சதவீதமாக உள்ளது.
கரோனா காலத்தில் லட்சக்கணக்கானோா் தில்லியில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. தில்லி அரசுத் துறைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அதை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விஷயங்களை மாநகராட்சி இடைத் தோ்தலில் மக்களிடம் தா்னா, ஆா்ப்பாட்டங்கள் மூலம் காங்கிரஸ் எடுத்துச் சென்று வருகிறது என்றனா். பேட்டியின்போது தில்லி காங்கிரஸின் சட்ட, மனித உரிமைகள் துறையின் தலைவா் சுனில் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.