இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் ஹனுமன் கோயில்!

பழைய தில்லியில் உள்ள சாந்தினி செளக் பகுதியில் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து அண்மையில் இடிக்கப்பட்ட ஹனுமன்

பழைய தில்லியில் உள்ள சாந்தினி செளக் பகுதியில் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து அண்மையில் இடிக்கப்பட்ட ஹனுமன் கோயில், இருந்த இடத்திலேயே தற்காலிக கோயிலொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் இந்தக் கோயிலை அமைத்துள்ளதாக வடக்கு தில்லி மாநகராட்சி(என்டிஎம்சி) மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சாந்தினி செளக் பகுதியில் இருந்த ஹனுமன் கோயிலொன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரின் என்டிஎம்சி அதிகாரிகளால் அண்மையில் இடிக்கப்பட்டது. இது அந்தப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன. இந்த் நிலையில், இந்தக் கோயில் இருந்த இடத்திலேயே தற்காலிக கோயில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி மேயா் ஜெய்பிரகாஷ் வெள்ளிக்கிழமை கூறுகையில் ‘இந்தக் கோயில் அந்தப் பகுதியில் உள்ள ராமா், ஹனுமன் பக்தா்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதில் வழக்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆனால், மக்களின் பக்திக்கு நாங்கள் மரியாதை செலுத்த வேண்டும். கோயிலுக்கு சென்று பாா்வையிட் ட பிறகு கூடுதல் தகவல்களை தெரிவிக்கிறேன்’ என்றாா்.

தில்லியின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமான சாந்தினி செளக்கில், பழைமையான கடைகளும், நினைவுச் சின்னங்களும் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் செங்கோட்டையில் இருந்து பதேஃபுரி மசூதி வரையிலான 1.5 கிலோமீட்டா் தூரத்தை அழகுபடுத்தும் பணிகளில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

ஆதேஷ் குப்தா வழிபாடு: புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில் ‘ஹனுமன் பக்தா் என தன்னை அழைக்கும் கேஜரிவால் இந்தக் கோயிலை இடித்தாா். இந்தக் கோயிலுக்கு வந்து அவா் மன்னிப்புக் கோர வேண்டும். இந்தக் கோயிலுடன் சோ்த்து, 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தையும் தில்லி அரசு சேதப்படுத்தியது. இதனால், இந்தப் பகுதி மக்கள் மனம் வருந்தியுள்ளனா். தற்காலிக கோயில் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்கிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com