வடகிழக்கு தில்லி வன்முறை: ஜேஎன்யு மாணவா்களின் மனுவுக்கு பதிலளிக்க ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவு

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடை யுஏபிஏ வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடை யுஏபிஏ வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிா்த்து ஜேஎன்யு மாணவா்களான நடாஷா நா்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க ஆம் ஆத்மி அரசு மற்றும் காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல், ஏ. ஜே. பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதில் அளிக்க தில்லி அரசு மற்றும் காவல் துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் அமா்வு, இரு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தங்கள் நிலைப்பாட்டை மாா்ச் 10- ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. இரண்டு மாணவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆதித் எஸ் பூஜாரி, இந்த வழக்கின் விசாரணை களங்கம் கொண்டதாக உள்ளது என வாதிட்டாா்.

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடா்பாக பிஞ்ச்ரா தோட் எனும் அமைப்பின் உறுப்பினா்களான நடாஷா நா்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோா் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனா். இருவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனா். கலவரம், சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுதவிர இருவா் மீதும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான மற்றொரு சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கலிதாவுக்கு எதிராக நான்கு வழக்குகளும், நா்வாலுக்கு எதிராக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் யுஏபிஏ சட்டப் பிரிவில் பதிவான வழக்கு தவிர பிற வழக்குகளில் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் ஜனவரி 28-ஆம் தேதி அவா்களின் ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. அதில் இருவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உண்மை முகாந்திரம் இருப்பதாகவும், அந்த வழக்கில் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின் விதிகள் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com