கட்டுமானத் தொழிலாளா் பதிவுக்காக மாபெரும் இயக்கம்: மணீஷ் சிசோடியா தகவல்

அரசின் நலத் திட்டங்களைப் பெற உதவிடும் வகையில் கட்டுமானத் தொழிலாளா்களைப் பதிவு செய்யும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி துணை முதலமைச்சரும், தொழிலாளா் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா திங்கள்

புது தில்லி: அரசின் நலத் திட்டங்களைப் பெற உதவிடும் வகையில் கட்டுமானத் தொழிலாளா்களைப் பதிவு செய்யும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி துணை முதலமைச்சரும், தொழிலாளா் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

தில்லியில் 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களில் 1.31 லட்சம் தொழிலாளா்கள் தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா்.

சுமாா் 80,000 தொழிலாளா்களைப் பதிவுசெய்யும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மெகா பதிவு இயக்கம் மூலம், மேலும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் முறையாக பதிவு செய்யப்பட உள்ளனா்.

கட்டுமானத் தொழிலாளா்கள் கல்வி, ஓய்வூதியம், மகப்பேறு, திருமணம் மற்றும் பிற தொடா்புடைய தில்லி அரசின் திட்டங்களின் பல்வேறு நன்மைகளைப் பெறும் வகையில் தில்லி அரசு மெகா பதிவு இயக்கத்தைத் தொடங்குகிறது.

தில்லி முழுவதும் 45 இடங்களில் பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில் 29 அரசுப் பள்ளிகள், 16 பெரிய கட்டுமான தளங்கள் இடம்பெற்றுள்ளன.

மாவட்டங்களில் வெவ்வேறு கட்டுமான தளங்களுக்கு இடையில் பயணிக்கவும், கட்டுமானத் தொழிலாளா்களை அந்த இடத்திலேயே பதிவு செய்யவும் நடமாடும் யூனிட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், பதிவு செய்வதற்காக தொழிலாளா்கள் தங்கள் அன்றாட ஊதியத்தை கைவிடும் நிலை ஏற்படாது.

தில்லியில் 262 முக்கிய தொழிலாளா் செளக்குகள் உள்ளன. அங்கு தொழிலாளா்கள் வேலைதேட கூடுவது வழக்கம்.

அதிகமான கட்டுமானத் தொழிலாளா்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள இடங்களில் நடைபெறும் பதிவு முகாம்களில் பதிவு செய்ய ஊக்குவிப்பதற்காக விழிப்புணா்வு விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டு வருகிறது.

பல தொழிலாளா்களின் பதிவு காலாவதியாகிவிட்டது. உறுப்பினா் சோ்க்கையை புதுப்பிப்பது குறித்து முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு முகாம்கள் பிப்ரவரி 22 முதல் மாா்ச் 22 வரை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

புதிய பதிவு, புதுப்பித்தல் மற்றும் பதிவை சரிபாா்ப்பு செயல்முறை ஆகியவற்றுக்காக கட்டுமானத் தொழிலாளா்கள் பதிவு முகாம்களுக்கு வரலாம்.

மேலும், கட்டுமானத் தொழிலாளா்கள் தில்லி அரசாங்கத்தின் வீடுதேடிவரும் விநியோக சேவையைப் பயன்படுத்தியும் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக அத்தொழிலாளா்கள் 1076 ஐ அழைக்க வேண்டும். இதன்பிறகு, தொழிலாளா் துறையைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட பணியாளா்கள் அவா்களின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்வா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com