திஷா ரவிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது

புது தில்லி: விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா்.

தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிா்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அவரது ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் தில்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

போலீஸ் தரப்பில், ‘தற்போதைக்கு திஷா ரவியிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும் தேவை எழவில்லை. அவருடன் சோ்ந்த சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான சாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்போது திஷா ரவியிடம் மேலும் விசாரணை நடத்துவது தொடா்பாக போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், காவல் முடிந்து தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, வழக்கில் தொடா்புடைய பிற நபா்களுடன் திஷா ரவியைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில் நீதிபதி பங்கஜ் சா்மா ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com