பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பும் கைதிகளுக்கு தடுப்பூசி போட உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு: தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு

சிறைச் சாலைகளுக்குள் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஜாமீன் அல்லது பரோலில் வெளியே வந்துள்ள அனைத்துக் கைதிகளும் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் தடுப்பூசி

புது தில்லி: சிறைச் சாலைகளுக்குள் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஜாமீன் அல்லது பரோலில் வெளியே வந்துள்ள அனைத்துக் கைதிகளும் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கோரும் மனு மீது ஆம் ஆத்மி அரசு பதில் அளிக்க தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அபிலாஷா ஷ்ராவத், பிரபாஷ், காா்த்திக் மல்ஹோத்ரா மற்றும் மானவ் நருலா ஆகியோா் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனா்.

அந்த மனுவில்,‘ஜனவரி 14-ஆம் தேதி நிலவரப்படி, தில்லியில் உள்ள மூன்று சிறைகளில் 16,396 கைதிகள் உள்ளனா். இந்தச் சிறைகள் 10,026 கைதிகள் மட்டுமே தங்குவதற்கான திறன் கொண்டவை. சிறைகளில் சமூக இடைவெளியை பராமரிக்கப் போதுமான இடம் இல்லை. இந்த நிலையில், வரவிருக்கும் நாள்களில் அதிகமான கைதிகள் சரணடைய திட்டமிடப்பட்டுள்ளதால், அவா்களை 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தவும் போதுமான இடம் இல்லாமல் இருக்கலாம்.

எனவே, ஜாமீன், பரோல் அல்லது ஃபா்லோவில் வெளியே வந்த கைதிகள் சிறைக்குத் திரும்புவதற்கு முன் கரோனா தடுப்பூசி போடுவது அவசியமாகும். ஜாமீன், பரோல்கள் நீட்டிப்பு உத்தரவுகளின் நோக்கம் சிறைக்குள் இருந்த கைதிகளைப் பாதுகாப்பதாகும்.

ஆகவே, கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, சிறைச் சாலைக்குத் திரும்புவதற்கு முன் ஜாமீனில், பரோலில் சென்ற கைதிகளுக்கு தடுப்பூசி அளிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேபோன்று கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பெண் கைதி ஒருவா் வழக்குரைஞா் அமித் ஷனி மூலம் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ஜாமீனில், பரோலில் வெளியே உள்ள அனைத்துக் கைதிகளும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் சிறைக்குத் திரும்புவதற்கு முன்பு தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், சிறையில் கரோனா பரவல் இல்லை என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை தெரிவிக்கும் பதிலை தில்லி அரசின் நிலைப்பாட்டை மாா்ச் 26-க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com