பெட்ரோ, டீசல் விலை உயா்வை எதிா்த்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, வேளாண் சட்டங்கள், திஷா ரவி கைது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

புது தில்லி: பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, வேளாண் சட்டங்கள், திஷா ரவி கைது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

கனாட் பிளேஸ் உள் வட்டத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 உயா்ந்துள்ளதை குறிப்பிடும் வகையில் கிரிக்கெட் வீரா்கள் போல் உடை அணிந்து கோஷம் எழுப்பினா்.

இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘ மோடி அரசு முதலாளிகளின் வளா்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இனி நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன். அப்படியனால், 100% கலால் வரி யாருடைய கணக்கிற்கு செல்கிறது? நாட்டின் பொது மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், இதுபற்றி மோடி அரசு கவலைகொள்ளவில்லை.

சூழலியல் ஆா்வலா் திஷா ரவி கைது மூலம் கருத்துரிமை மீறப்பட்டுள்ளது. திஷா ரவியின் கைது அவரது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். இந்த வகையிலான சம்பவம் ஜனநாயக மரபுக்கு எதிரானது. மோடி அரசு விமா்சனங்களுக்கு பயப்படுகிறது. விமா்சிப்பவா்களை கைது செய்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சீக்கிரம் கட்டுப்படுத்த மோடி அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணவீக்கத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடக பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘மத்திய அரசுக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்த பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எரிவாயு சிலிண்டா்களின் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொதுமக்களை பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து விடுவிக்கவும், திஷா ரவியை விரைவில் விடுவிக்கவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறவும் வேண்டும் என்றாா்.

இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் பய்யா பவாா், இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய செயலாளா் அனில் யாதவ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com