மெட்ரோ ரயில், பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை: தற்போதுள்ள நிலையே மேலும் 2 வாரங்களுக்கு தொடரும்

தில்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகள் தற்போது வரையறுக்கப்பட்ட பயணிகள் அடிப்படையிலேயே மேலும் இரண்டு வாரங்களுக்கு இயக்கப்படும்.

புதுதில்லி: தில்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகள் தற்போது வரையறுக்கப்பட்ட பயணிகள் அடிப்படையிலேயே மேலும் இரண்டு வாரங்களுக்கு இயக்கப்படும். அவற்றின் இயக்கத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் புதிதாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக் தெரிகிறது.

தில்லி மெட்ரோ ரயில்களும், தனியாா் பேருந்துகளும் தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள பயணிகள் அடிப்படையிலேயே இயக்கப்படும் என்றும் இரண்டு வாரங்கள் சென்றபின் மீண்டும் நிலைமையை பொருத்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வாரம், தில்லி போக்குவரத்துத் துறை, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் தில்லியில் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.

இதனிடையே திங்கள்கிழமை தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தலைமைச் செயலா் விஜய் தேவ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தில்லி போக்குவரத்துக் கழகம் மற்றும் கிளஸ்டா் பேருந்துகளில் தற்போது முழு இருக்கைகளிலும் பயணிகள் அமா்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனினும் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதி இல்லை.

இதேபோல மெட்ரோ ரயில்களில் பயணிகள் ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கை என்ற அடிப்படையில் அமா்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மெட்ரோவில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கலாம். ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனாவுக்கு இருவா் பலியாகியுள்ளனா். கரோனா தொற்று விகிதமும் 0.23 சதவீதமாகக் குறைந்துள்ளது. தில்லியில் கரோனாவுக்கு இதுவரை 10,900 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com