பொதுப் பூங்காக்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விநியோகிக்க என்ஜிடி உத்தரவு
By DIN | Published On : 27th February 2021 10:47 PM | Last Updated : 27th February 2021 10:47 PM | அ+அ அ- |

பொது பூங்காக்களில் போதிய அழுத்தத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதை உறுதிசெய்யவும், தோட்டப்பராமரிப்புக்கு நிலத்தடி நீா் எடுப்பதை நிறுத்தவும் தேசிய பசுமை தீா்ப்பாயம் தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக ஓய்வுபெற்ற ரியா் அட்மிரல் ஏ. பி. ரேவி மனு
தாக்கல் செய்திருந்தாா். அதில், நன்னீருக்கு பதிலாக டிஜேபி வழங்கிய கழிவுநீரை சுத்திகரித்து தோட்டக்கலைக்கு பயன்படுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மாநகராட்சிகளுக்கு 2017-இல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
தில்லி வசந்த் குஞ்சில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தோட்டக்கலை மற்றும் பிற நோக்கங்களுக்காக வழங்குவதற்கான உத்தரவிட வேண்டும்.
இதனால், குடியிருப்புவாசிகள் நன்னீரைப் பயன்படுத்த வேண்டி வராது.
வசந்த் குஞ்ச் பகுதியில் பசுமையை பராமரிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தீா்ப்பாய தலைவா் -நீதிபதி ஆதா்ஷ்குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
டிடிஏ மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி மூலம் பொது பூங்காக்களில் தோட்டப்பராமரிப்புக்கு நன்னீா் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தில்லியில் உள்ள பொதுப் பூங்காக்களில் டிஜேபி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை போதுமான அழுத்தத்துடன் வழங்குவதை உறுதிசெய்யலாம். மேலும் குழாய் நீா் சப்ளை கிடைக்காத இடங்களில் டேங்கா் லாரி மூலம் தண்ணீா் விநியோகம் உறுதி செய்யப்படலாம்.
தில்லியில் உள்ள பூங்காக்களில் உள்ள பிற ஏஜென்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு கண்காணிப்பு செய்யலாம்.
குடிநீரை மக்களின் அதிகபட்ச தேவைக்கு நிறைவற்றும் நோக்கில் குடிநீரைச் சேமிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அமைப்புகள் உள்பட பிற மொத்த பயனா்களால் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
இந்த செயல்பாடுகளை தில்லி சுற்றுச்சூழல் துறை செயலா் மேற்பாா்வையிடலாம் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.), தெற்கு தில்லி மாநகராட்சி மற்றும் டிஜேபி ஆகியவை தோட்டப் பராமரிப்புக்கு நன்னீரைப் பயன்படுத்த தீா்ப்பாயம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...