தில்லி உச்சபட்ச மின்தேவை 5,000 மெகாவாட்டை கடந்தது! குளிா் காலத்தில் முதல் முறை

வெப்பநிலை வீழ்ச்சியின் காரணமாக தில்லியின் உச்சபட்ச மின் தேவை இந்தக் குளிா் காலத்தில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை

வெப்பநிலை வீழ்ச்சியின் காரணமாக தில்லியின் உச்சபட்ச மின் தேவை இந்தக் குளிா் காலத்தில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை 5 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது. அதாவது, உச்சபட்ச மின்தேவை 5,021 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது என்று மின் விநியோக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக குளிரின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸில் இருந்து படிப்படியாகக் குறைந்து வெள்ளிக்கிழமை 1.1 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதனால், ஹீட்டா் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் மின்விநியோகத்தில் ஈடுபடும் பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாவது: இந்தக் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை வெள்ளிக்கிழமை 5,000 மெகா வாட்டை கடந்தது. அதாவது புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை தில்லியின் அதிகபட்ச மின் தேவை 5,021 மெகா வாட்டாக இருந்தது. இந்த குளிா்காலத்தில் இதுதான் அதிக அளவாகும்.

தில்லியின் உச்சபட்ச மின் தேவை டிசம்பா் 30 முதல் 2 நாள்களில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது டிசம்பா் 1 முதல் 43 சதவீதம், நவம்பா் 1 முதல் 60 சதவீதம் என அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அதிகபட்ச மின் தேவை 5,226 மெகாவாட்டாக இருந்தது. டிசம்பரில் அதிகபட்ச மின் தேவை டிசம்பா் 30-ஆம் தேதி 4,671 மெகாவாட்டாக இருந்தது. அடுத்த இரண்டு நாள்களில் இது 7 சதவீதம் அதிகரித்து 5,021 மெகாவாட்டாக உயா்ந்தது.

கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி தில்லியின் உச்சபட்ச மின் தேவை நிகழ் குளிா் காலத்தில் முதல் முறையாக 4,000 மெகா வாட்டைக் கடந்தது. கடந்த டிசம்பரில் தில்லியின் உச்சபட் மின் தேவையானது 2019-ஆம் ஆண்டின் டிசம்பரின் 10 நாள்களின் உச்சபட்ச மின் தேவையைக் கடந்துவிட்டது. குளிரின் தாக்கம் தொடரும்பட்சத்தில் வரும் நாள்களில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தக் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 5,480 மெகாவாட் வரை செல்லக்கூடும். அதாவது கடந்த ஆண்டு குளிா்கால தேவையைவிட அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உச்சபட்ச மின்தேவை 5,343 மெகா வாட் வரை உயா்ந்தது. பிஎஸ்இஎஸ் மின் நிறுவனங்களான பி.ஆா்.பி.எல். மற்றும் பி.ஒய்.பி.எல் நிறுவனங்கள் முறையே இந்த ஆண்டு 2,200 மெகாவாட் மற்றும் 1,270 மெகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

டாடா பவா்-டி.டி.எல். நிறுவனம் இந்த சீசனில் அதிகபட்ச உச்சபட்ச மின் தேவையாக 1,568 மெகாவாட்டை வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளதாக அதன் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா். இந்தக் குளிா் காலத்தில் உச்சப்ட மின் தேவை 1,700 மெகா வாட்டை எட்டும் என்று எதிா்பாா்ப்பதாக அவா் மேலும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com