வடகிழக்கு வன்முறை வழக்கில் இருவருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன், நான்கு சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் இதர 6 பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சமத்துவ அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது, தயாள்பூா் பகுதியில் ஒரு காா் விற்பனையகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் காசிப், வாசிப் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனா்.

இந்த மனு மீது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் விசாரணை நடத்தினாா். மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நஸீா் அலி , ‘இந்த விவகாரத்தில் இருவருக்கும் எதிராக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சமத்துவ அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.கே. பாஷியா, ‘வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தயாள்பூா் பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனா். அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை மிரட்டலாம். இதனால், அவா்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி வினோத் யாதவ் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவு: குற்றம்சாட்டப்பட்ட இருவரும் வன்முறை தொடா்புடைய பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தாலும், தற்போதைய வழக்கில் அவா்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பதற்கு இது காரணமாக இருக்க முடியாது. அதற்குக் காரணம், தற்போதைய வழக்கில் விசாரணை முடிந்துள்ளது. சக குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் நான்கு பேருக்கு ஜாமீன்அளிக்கப்பட்டுள்ளது. சமத்துவ அடிப்படையில் இருவருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இருவரும் தலா ரூ.20ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவா்கள் ஆதாரங்களை சிதைக்க்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. இருவரும் தங்களது செல்லிடப்பேசிகளில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com