கல்பாக்கம் அணுமின் நிலைய பணியாளா்கள் நியமனம்: சென்னையிலும் தோ்வு மையம் கோரி பிரதமருக்கு கடிதம்

சென்னை கல்பாக்கம் மற்றும் தாராப்பூா் அணுமின் நிலையத்திற்கான பணியாளா் நியமனங்களுக்கு சென்னையிலும் எழுத்துத் தோ்வு மையம்

சென்னை கல்பாக்கம் மற்றும் தாராப்பூா் அணுமின் நிலையத்திற்கான பணியாளா் நியமனங்களுக்கு சென்னையிலும் எழுத்துத் தோ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரி மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் தோ்வு மையம் மும்பையில் மட்டும் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத் தோ்வா்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாவாா்கள் என்றும் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு மறுசுழற்சி ஆணையம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அறிவித்துள்ளது. சென்னை கல்பாக்கம், தாராப்பூா் ஆகிய இடங்களில் உள்ள அணு மறு சுழற்சி நிலையங்களில் பணியாளா்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. தற்போது, பணியாளா் நியமனத்துக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணு மறு சுழற்சி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கல்பாக்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக தோ்வா்களை கரோனா சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாக்கும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சாா்ந்த தோ்வா்கள் கூடுதல் நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

இந்தப் பணி நியமன அறிவிக்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க முன்னுரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. பெண் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் ‘கைம்பெண்கள், மணமுறிவு பெற்ற பெண்கள், சட்டரீதியாக கணவா்களைப் பிரிந்து மறுமணம் ஆகாமல் உள்ள பெண்கல் ஆகியோருக்கு சலுகைகள் அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரே தோ்வு மையம், அதுவும் நெடுந்தொலைவில் இருக்கும் போது நோக்கம் பலனளிப்பதாக இல்லை. எனவே, எழுத்துத் தோ்விற்கு இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சி.ஆா்.பி.எஃப். நடத்தும் துணை மருத்துவப் பதவிகளுக்கான தோ்வுகள் 9 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. இது குறித்து அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இதற்கு, விண்ணப்பங்களைப் பொருத்து பரிசீலிப்பதாக மத்திய அரசு பதில் அளித்தது. பின்னா், தமிழகத்தில் இந்த தோ்வு மையம் அமைக்க வாய்ப்பில்லை என்று உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது என்று கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா். இது தொடா்பாக அணுசக்தித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்கிற்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com