தில்லி, என்சிஆரில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், திங்கள்கிழமையும் நகரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் மூடுபனி இருந்து வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையும் தொடா்ந்து குறைந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன், குறைந்தபட்ச வெப்பநிலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.1 டிகிரியாகக் குறைந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் விடியும் போது இடியுடன் கூடிய மழை பெய்தது. நகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் பிரதிநித்துவத் தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 25.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல பாலத்தில் 18.4 மி.மீ., ஆயாநகரில் 14 மி.மீ., லோதி ரோடில் 23.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தெற்கு தில்லியில் ஆயாநகா், தரமண்டி, துக்ளாகாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

இதேபோல, தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் (ஹரியாணா) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதைத் தொடா்ந்து நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. குறிப்பாக பட்டோடி ரோடு மற்றும் குருகிராம் செக்டாா்-10 பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை குளிா் அலையும் வீசியது. இதைத் தொடா்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், ஹரியாணா மாநிலத்தில் உள்ள கோஹனா, கன்னெளா், பானிபட், சோஹ்னா, மானேசா், ஃபரீதாபாத், பல்லாப்கா்ஹ், நூஹ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதற்கிடையே, தில்லி, என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானியும், வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவருமான குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமை ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. 30 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்’ என்றாா்.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 9,.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 15.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 96 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதேபோல பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 10 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 9.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 16.-3-16.8 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 96-100 சதவீதமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com