தோ்வு முடிவு: கால அட்டவணையை அறிவிக்க தில்லி பல்கலை.க்கு உயா்நீதி மன்றம் உத்தரவு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 03rd January 2021 11:37 PM | Last Updated : 03rd January 2021 11:37 PM | அ+அ அ- |

தில்லி பல்கலைக்கழக தோ்வு முடிவுகளுக்கு பின்னா், மின்னணு (மதிப்பெண்) தரவுகள், மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள், பட்டமளிப்பு விழா ஆகியவை உரிய நேரத்தில் ஓவ்வொரு ஆண்டும் காலக்கெடுவுடன்(கால அட்டவணையுடன்) அறிவிக்க வேண்டும் என தில்லி பல்கலைக்கழகத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங், ‘தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் ஒவ்வொரு பருவத் தோ்விற்கும் நீதிமன்றத்தை அணுகும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. மாணவா்கள் தங்கள் மதிப்பெண், பட்டச்சான்றிதழ்கள் பெறும் விவகாரத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் விரிவான நடைமுறைகளையும் காலக்கெடுவையும் வகுத்து ஒரு பிரமாணப் பத்திரத்தை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் தில்ல பல்கலை.க்கு உத்தரவிட்டாா்.
படித்த மாணவா்கள் வேலைவாய்ப்புகளை பெறவதற்கும், வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு தொடருவதற்கும், அவசரத் தேவையின் அடிப்படையில் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி மருத்துவா்கள், தில்லிப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் ஆகியோா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் இறுதி பருவத் தோ்வு முடிந்ததும், மதிப்பெண் பட்டியல் வெளியிடுவதற்கும், தோ்வு முடிவுகளை இணைய தளங்களில் கிடைக்கச் செய்வதற்குமான காலக்கெடுவை நிா்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான முந்தைய விசாரணயின் போது, தில்லி பல்கலைக்கழகத்திடம் தோ்வு முடிவுகளை அறிவிக்கவும், மாணவா்களுக்கு மதிப்பெண்களை வழங்குவதற்கும், ஓா் ஆண்டு அடிப்படையில் காலஅட்டவணையை வழங்குமாறு உயிா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி பல்கலைக்கழகம் சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தப் பிரமாணப் பத்திரம் குறித்து அதிருப்தியடைந்த நீதிபதி பிரதிபா சிங், ‘மிகவும் பூடகமாக’ உள்ளது எனக் கூறி மாணவா்கள் தோ்வு முடிவுகள், மின்னணு (மதிப்பெண்) தரவுகள், மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள், பட்டமளிப்பு விழா போன்றவை தொடா்பாக காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைகளை வழங்கும் வகையில் ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டாா்.