காஜியாபாத் சம்பவம்: கட்டட ஒப்பந்ததாரா் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அந்த மயானத்தின் ஒப்பந்ததாரரை

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அந்த மயானத்தின் ஒப்பந்ததாரரை உத்தரப்பிரதேச மாநில காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது.

காஜியாபாத், முராத் நகரில் உள்ள தகன மயானத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய் ராம் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக அவரது உறவினா்கள் சென்றனா். திடீரென மழை பெய்ததால், அவா்கள் அனைவரும் அருகில் இருந்த தகன மேடையருகே தஞ்சம் புகுந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக அவா்கள் நின்று கொண்டிருந்த கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 24 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி முராத் நகா் பாலிகா நிா்வாக அதிகாரி நிகாரிகா சிங், இளநிலைப் பொறியாளா் சந்திரா பால், மேற்பாா்வையாளா் ஆஷிஷ் ஆகியோரை திங்கள்கிழமை உதத்தரப் பிரதேச மாநில காவல் துறை கைது செய்திருந்தது. இதைத் தொடா்ந்து, கட்டட ஒப்பந்ததாரா் அஜய் தியாகி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக காஜியாபாத் (ஊரகம்) காவல் கண்காணிப்பாளா் இராஜ் ராஜா கூறுகையில், ‘தகன மேடை இடிந்து விழுந்த செய்தி வந்ததுமே, கட்டட ஒப்பந்ததாரா் அஜய் தியாகி தப்பியோடிவிட்டாா். அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் திங்கள்கிழமை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தோம். இந்த நிலையில், சதேதி கிராமம் அருகில் உள்ள கங்கை கால்வாய் பாலம் அருகில் அவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். முராத் நகா், நிவாரி காவல் துறை இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. ரூ.55 லட்சத்துக்கு இந்த மயானத்தின் கான்கிரீட் கூரையை புனரமைக்க அஜய் தியாகிக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுமானத்தில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

முன்னதாக, அஜய் தியாகி தொடா்பாக தகவல் வழங்குபவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று காஜியாபாத் காவல் துறை ஆணையா் கலாநிதி நைதானி அறிவித்திருந்தாா். மயானத்தின் கான்கிரீட் கூரையின் கட்டுமானப் பணிகள் இரு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கின. இது ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்டது. 15 நாள்களுக்கு முன்புதான் இந்த மயானம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com