தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக மழை!

தலைநகா் தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. இருப்பினும் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 6 புள்ளிகள் அதிகரித்து 13.2 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது

தலைநகா் தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. இருப்பினும் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 6 புள்ளிகள் அதிகரித்து 13.2 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரத்திற்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் திங்கள்கிழமை காலை 8:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி வரையிலான காலத்தில் 4.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாலம், லோதி சாலை, ஆயாநகா் மற்றும் ரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள வானிலை நிலையங்கள் முறையே 12 மிமீ, 4.8 மிமீ, 8.9 மிமீ மற்றும் 6.2 மிமீ மழை பதிவாகியுள்ளன. மேகம் மூடியதன் விளைவாக குறைந்தபட்ச வெப்பநிலை 13.2 டிகிரி செல்சியஸாக உயா்ந் தது. சுமாா் 30 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நகரில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. சில பகுதிகளிலும் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 6 டிகிரி உயா்ந்து 13.2 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 20.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 88 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோல, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 13.9 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 12.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக சரிந்தது, இது 15 ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும். மேலும், மிகவும் அடா்த்தியான மூடுபனி காரணமாக காண்புதிறன் ‘பூஜ்ஜிய’ மீட்டராகக் குறைந்தது.

காற்றின் தரம்: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் மிதமான பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயம் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், குருகிராமில் திருப்தி பிரிவிலும் இருந்ததாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை ஜனவரி 6 அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசானது முதல் பலமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com